செஞ்சோலை வளாகப் படுகொலை நாள் இன்று
இலங்கை
14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் இலங்கை வான்படையின் விமானங்கள் திட்டமிட்டு மேற்கொண்டதாகக் கூறப்படும் குண்டு வீச்ச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவச் செல்வங்களின் நினைவு நாள் இன்றாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்பிரிவில் உள்ள வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் 2006 ஆவணி 10 ஆம் நாள் முதல் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ முதலுதவிப் பயிற்சி நெறியில் வன்னிப்பிரதேச கிளிநொச்சி, முல்லைத்தீவு கல்வி வலயங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான உயர்தர வகுப்பு மாணவிகள் பங்குபற்றியிருந்தனர்.
மாணவர்கள் பயிற்சி நெறியில் பங்குபற்றிக்கொண்டிருந்த வேளை இலங்கை வான்படைக்குச் சொந்தமான நான்கு கிபிர் விமானங்கள் செஞ்சோலை வளாகத்தில் 2006 ஆகஸ்ட் 14 அன்று காலை 7.30 மணியளவில் காலைக் கடன்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவிகள் மீது கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலினை மேற்கொண்டன.
இக் குண்டுத் தாக்குதலில் 52 மாணவிகள் மற்றும் இரு பணியாளர்கள் உட்பட 54பேர் உயிரிழந்தனர்.
130 மாணவிகள் படுகாயமடைந்ததுடன் பல மாணவிகள் சிறு காயங்களுக்குமுள்ளாகினர்.
படுகாயமடைந்தவர்களில் மூன்று மாணவியர்களுக்கு கால்கள் துண்டக்கப்பட்டதுடன் மாணவி ஒருவர் கண் ஒன்றை இழந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.






















