நீ சினிமாவுக்கு லாய்க்கு இல்லை வேற வேலையை பார்! வாசன் அவர்கள்...
சினிமா
ஒரு நாளைக்கு சென்னையை நோக்கி வருகிறவர்களில் நடிப்பின் மீது கொண்ட ஆசையினால் வந்திறங்குபவர்கள் உண்டு. இப்படியான, எப்போதும் போட்டி கொண்ட ஒரு தொழிலுக்கு கணேசன் என்பவர் சூரக்கோட்டையில் இருந்து கிளம்பி வருகிறார்.
நாடகங்களில் வேடங்கள் கிடைக்கின்றன. திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட எஸ்.எஸ். வாசன் அவர்களின் முன்பாக போய் நிற்கிறார்.
அவர் கேட்டது சாதாரண வேடம். வாசனுக்கு சிவாஜி மீது நம்பிக்கையில்லை. மெல்லிய மாறுகண் கொண்ட ஒருவரால் உணர்வுகளைக் கண்களில் வெளிப்படுத்த முடியாது என்று திருப்பி அனுப்பி விடுகிறார், “நீ சினிமாவுக்கு லாயக்கில்லப்பா..வேறு வேலை பாரேன்’ என்ற அறிவுரையை எடுத்துக் கொண்டு சிவாஜி அமைதியாகியிருக்கவில்லை.
பெருமாள் என்ற மனித தெய்வம்
பராசக்தியில் வாய்ப்பினைப் பெற்று
தருகிறது.
சிவாஜி இந்த மண்ணின் மனிதர்களை நன்றாக உள்வாங்கியவர்.
ஒரு தங்கைக்காக அண்ணன் எத்தனை தூரம் தன்னை விட்டுக் கொடுப்பான் என்பதை சிவாஜி அறிந்திருந்தார். ‘கை வீசம்மா கை வீசு’ என்று பாடியபடி அவர் பாசமலரில் அழுவது இன்றைய தலைமுறையினருக்கு சிரிப்பாகத் தோன்றலாம். அனால் முழுப்படத்தையும் பார்க்கும் ஒருவர் அந்தக் காட்சி வரும்போது அழுவது என்பது சிவாஜியின் நடிப்பினால் அல்ல, தன் சகோதர சகோதரியை நினைத்து.. இந்த ஏக்கத்தினை, துக்கத்தை உள்வாங்கிய நடிகரால் தான் பார்வையாளர்களுக்குள் கடத்தமுடியும்.
நவராத்திரி’ படத்தில் வருகிற அந்தத் தெருக்கூத்து பாடல் காட்சிக்கு முன்பும் பின்புமான சிவாஜியை நினைவிருக்கிறதா? அந்தப் பணிவும், துணிச்சலும் அகங்காரம் அற்று சாவித்திரியிடம் கெஞ்சுகிற அந்தத் தொனியும், ‘நீ தான்மா என் குலசாமி’ என்று கையெடுத்து கும்பிடுகிறபோது..இந்த மனிதர் தானே ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் ஒரு வேட்டு சத்தத்திற்கு மத்தியில் என் நாதஸ்வரம் இசைக்காது என்று சீற்றத்துடன் எழுந்து போகும் சிக்கல் சண்முகனார்.
இவ்வளவு ஏன்? ஒரு மனிதர் தன வாழ்நாள் முழுக்க புகைபிடித்தால் கூட இவர் போல் இலாவகமாக புகைக்க இயலாது. அத்தனை விதவிதமான பாணிகளை புகைபிடிப்பதில் தந்திருப்பார்.
ஒருபுறம் எம்.ஜி.ஆரும், எஸ்.எஸ்.ஆரும் இது மாதிரியான புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கக்கூட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்க, மொத்தமாய் குத்தகை எடுத்துக் கொண்டார் சிவாஜி. இதைச் சொல்வது கொஞ்சம் மிகை தான் என்றாலும் காட்சியின் தன்மைக்கேற்ப அவர் சிகரெட்டில் இருந்து வெளிப்படும் புகையையும் கூட தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டாரோ என்று கூட தோன்றும்.
ஏனெனில் அந்தப் புகைகளை பிராதனப்படுத்த அதற்கென்று சில படங்களில் ஒளியமைப்பும் செய்திருப்பார்கள். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாட்டிலும், ‘யார் அந்த நிலவு’ பாடலிலும், நவராத்திரியின் கடைசி காட்சியில் காவல்துறை அதிகாரியாக புகைபிடிப்பதிலும், பாரிஸ்டர் ரஜினிகாந்தாக புகையை வெளிவிடுவதிலும் அவர் காட்டிய வித்தியாசங்கள் சாதாரணமாக வரக்கூடியது அல்ல, அது பயிற்சியினால் வெளிப்படக் கூடியது.
கர்ணன், வீரபாண்டியகட்டபொம்மன், ராஜராஜசோழன் என மன்னர் கதாபாத்திரங்களை அவர் ஏற்று நடிக்கையில் அந்த ஒப்பனையும், கீரிடமும் உடையும் ஒன்று தான். ஆனால் அதற்குள் அவர் காட்டிய நடிப்புத் திறனே அவரை சோழனாகவும், கட்டபொம்முவாகவும் , கர்ணனாகவும் நினைக்க வைத்தது
ஏபிஎன் கடவுளின்’ இத்தனை தகுதிகளுக்கும் நம்பியது சிவாஜியைத் தான். கடவுளாய் நடிப்பதென்பது சாதாரணமல்ல. நுட்பமான ஒன்றையும் கவனிக்க வேண்டும். பெரியாரின் தீவிர தொண்டனாய், முதல் படத்திலேயே கலைஞரின் பகுத்தறிவு வசனங்களைப் பேசித் திரைத்துறைக்குள் நுழைந்த ஒருவரை மக்கள் கடவுளாய் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அது தனிப்பட்ட முறையில் சிவாஜியின் நடிப்புக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.
ஒரு நடிகருக்கு மிகப்பெரிய சொத்து என்பது அவர்களது குரல்.
சிவாஜியின் நடிப்பைப் போன்றே அவரது குரல் வளம் குறித்து தனிக்கட்டுரையே எழுத முடியும்
.
நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்தது அவரது உடல் மட்டுமல்ல, குரல்களும் தான்.
சிங்காரமான மொழிநடையும், வெள்ளந்தியான பேச்சும், ஆங்கிலக் கலப்பில் பேசியதும் , கம்பீரமான சிரிப்பினை வெடிக்க வைத்து கர்ஜித்ததும் ..ஒரே குரலின் அசாத்தியமான பரிமாணங்கள்.
ஒரு கலைஞன் நம்மிடமிருந்து விடைபெறும்போது வெற்றிடத்தை விட்டுச் செல்கிறார்.
சிவாஜி நமக்கு விட்டுச்சென்றது ஒருபோதும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம்…
எப்படி ஒரு நடிகர் தன்னை இறுதி வரைக்கும் அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும்? இதற்கு எனக்குத் தெரிந்த பதில் அவருக்கு தொழிலின் மீது இருக்கும் அளவு கடந்த பக்தி என்பதே.
எழுத்தாளர்: தீபா அவர்கள்!























