இரண்டு வீரர்கள் பலி - ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்திய அமெரிக்கா
ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், ராணுவ தளம், கட்டுப்பாட்டு அமைப்புகள் போன்ற இடங்களில் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் தலைமையில் கடந்த மாதம் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தமான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
நேற்று ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் உடனான போரில் ஜோர்டான் தளத்தில் வீரர்கள் மரணம் அடைந்த தகவலை முதல் முறையாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரண்டு வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒரு வீரரை காணவில்லை என்றும் நான்கு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கு விரைவாக பதிலடி கொடுக்கும் வகையில் ஜலசந்தியை நிர்வகிக்கும் திறன் கொண்ட பகுதிகள் மீது அமெரிக்கா அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியின் சிரிக் அருகில் உள்ள பகுதி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 16 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 430-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ராணுவ வீரர்கள் உயிரழந்ததாக அறிவிப்பதற்கு முன்னதாக, எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மறக்க முடியாத பாடம் கற்பிப்போம் என்று ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடும் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதனால் கோபம் அடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி, வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது. அப்போது துபாய், கத்தார், பஹ்ரைன், குவைத் பொது இடங்களையும் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மீதும் தாக்குதல் நடத்தியது.
சமீபகாலமாக ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.





















