ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க கோரிக்கை - றஜீவன் எம்.பி
இலங்கை
நாட்டில் ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் நாடாளுமன்றத்தில் முன்மொழிவு ஒன்றை முன்வைத்தார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு பிரேரணையை முன்வைத்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது, ஆடிப்பிறப்பு தமிழர் மரபு, பண்பாடு மற்றும் ஆன்மீக வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடைய முக்கியமான நாளாகும் என்பதால், அதனை தேசிய ரீதியில் அங்கீகரிக்கும் வகையில் பொது விடுமுறையாக அறிவிப்பது பொருத்தமானதாக இருக்கும்.
மேலும், இத்தகைய நடவடிக்கை இலங்கையின் மத மற்றும் கலாசார சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், குறிப்பாக இந்தியாவிலிருந்து வருகை தரும் ஆன்மீக சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் நாட்டிற்கு ஈர்க்க உதவும்.
அதன் மூலம் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, உள்ளூர் பொருளாதார முன்னேற்றம், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் வருமான உயர்வு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நாட்டிற்கு கிடைக்கும்.
எனவே, ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிப்பது தொடர்பாக அரசு சாதகமான பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.






















