கந்தளாயில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகம்
இலங்கை
கந்தளாய் பகுதியில் சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இன்று (26) விசேட விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வு கந்தளாய் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உப்புள் பி. சேனவிரத்ன தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் கந்தளாய் பேருந்து நிலையம் மற்றும் பொதுச் சந்தை ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் சாரதிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
விநியோகிக்கப்பட்ட பிரசுரங்களில் போதைப்பொருள் பாவனை சமூகத்திலும் குடும்பங்களிலும் ஏற்படுத்தும் தீவிர பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டிருந்ததுடன், குறிப்பாக நாட்டின் எதிர்காலமாகக் கருதப்படும் பாடசாலை மாணவர்களும் போதைப்பொருள் வலையில் சிக்கி வருவது கவலைக்கிடமான நிலையாக சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் இது தேசிய மட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருள் ஆபத்து ஆண், பெண், இளைஞர், முதியவர், பணக்காரர், ஏழை என்ற எந்தப் பாகுபாடும் இன்றி அனைவரையும் பாதித்து வருவதால், இதனை ஒழிப்பதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு, தகவல்களை உரிய அதிகாரிகளிடம் பகிர்ந்து ஒத்துழைக்குமாறும் இதன்போது பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.





















