ஏம்பா எம்.ஜி.ஆரைத் தொட்டுக் கும்புட்டே..?
தமிழ்நாடு
லா.ச. ரா.
எம்ஜிஆர் சமாதியை
ஒரே ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்
எழுத்தாளர் லா.ச.ரா.
இதை அவரது மகன் சப்தரிஷி சில வருடங்களுக்கு முன் ஒரு பதிவாக எழுதி இருந்தார்.
அதைப் படித்த எனக்கு வியப்பாக இருந்தது. ஏனென்றால் லா.ச. ரா போன்ற இலக்கிய மேதைகளைக் கூட ஏதோ ஒரு வகையில் எம்ஜிஆர் கவர்ந்திருக்கிறார்.
அது பற்றி சப்தரிஷி பகிர்ந்ததில் இருந்து...
ஒரு நாள் தன் மகன் சப்தரிஷியை அழைத்தாராம் லா ச ரா.
"கண்ணா...எல்லாரும் எம்ஜிஆர் சமாதி, எம்ஜிஆர் சமாதிங்கறாளே, என்னை ஒரு தடவை அழைச்சுண்டு போய் காண்பிச்சுடு!"
இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் ஆச்சரியம் அடைந்தாராம் சப்தரிஷி. ஆனாலும் தன் அப்பாவின் விருப்பப்படியே அவரை எம்ஜிஆர் சமாதிக்கு அழைத்துச் சென்றாராம்.
சமாதி அருகே போய் செருப்பைக் கழற்றி விட்டு, சமாதியை ஒருதடவை சுற்றி வந்து தொட்டுக் கும்பிட்டாராம் லா.ச.ரா.
அதன் பின் அங்கிருந்து புறப்பட்ட
லா.ச. ரா, பஸ் ஸ்டாப்புக்கு வந்து பஸ்ஸில் ஏறும் வரைக்கும் எதுவுமே பேசவில்லையாம். பஸ் நகர ஆரம்பித்த பிறகு சப்தரிஷி லா.ச.ரா.விடம் கேட்டாராம்: "அப்பா, உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்."
"நீ கேப்பேன்னு எதிர்பார்த்தேன். கேக்கணும்னும் எதிர்பார்த்தேன் கேளு."
"ஏம்பா எம்.ஜி.ஆரைத் தொட்டுக் கும்புட்டே..?"
சப்தரிஷியின் இந்தக் கேள்விக்கு சற்று நேர மௌனத்துக்குப் பின் லா.ச. ரா இப்படிப் பதில் சொன்னாராம்: "செத்துப் போனவாளுக்கு ஜாதி, மதம், சின்னவா, பெரியவா, எதுவுமே கிடையாது. அவா காலமாகவே ஆனதால நம்மை விட மேலானவா... தவிர உலகத்துல இருக்கற எல்லாருக்குமே செத்துப் போனப்பறமும் உசுரோட இருக்கணும்னுதான் ஆசை. நாம எல்லாம் சொல்லிண்டிருக்கோம். அவர் செஞ்சுட்டார். நான் வணங்கினது அந்தச் சாதனைக்கு..!"
இந்த விஷயத்தைப் படித்து முடித்த பிறகு ஒன்று தோன்றியது.
மாயையைக் கடந்து
உண்மையைக் காண்பவர்கள் மனிதர்களில் தெய்வத்தைக் காண்கிறார்கள். அவர்களும் கூட தெய்வமாகவே ஆகிப் போகிறார்கள்..!
லா ச ரா அவர்கள் உள்ளத்தின்
உன்னத உணர்வுகளை வணங்குகிறேன்.
இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு சப்தரிஷி அவர்களுக்கு நன்றி !
உழைப்பாளர் தினமான இந்த
மே 1 இல் எம்ஜிஆர் பற்றிய இன்னொரு சம்பவமும் என் நினைவுக்கு வருகிறது.
சிம்லா அருகே 'அன்பே வா' ஷூட்டிங்கை முடித்துவிட்டு மாலை நெருங்கியவுடன் தங்கும் அறைகளுக்குத் திரும்பி
வந்து கொண்டிருந்தார்கள் படக்குழுவினர்.
எம்ஜிஆர் ஒரு காரில்,
டைரக்டர் ஏ சி திருலோக்சந்தர் இன்னொரு காரில்.
வரும் வழியில், மலைப் பிரதேசங்களில் ஆங்காங்கே 'பளிச் பளிச்’ என்று வெயில் அடித்துக் கொண்டு இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர்., ''அட... இங்கெல்லாம் வெயிலும் வெளிச்சமும் இருக்கிறதே. இன்னும் கூட இரண்டு காட்சிகளை எடுக்கலாமே?
கொஞ்சம் காரை நிறுத்தப்பா...
மாணிக்கம், பின்னாலே டைரக்டர் சார் வண்டி வருது. நிறுத்தி இன்னும் ஏதாவது எடுக்கப் போறாங்களானு கேளு'' என்றாராம்.
மாணிக்கம் கேட்டுவிட்டு ஓடோடி வந்தார். ''ஒன்றும் இல்லை; நேராக சிம்லா போக வேண்டியதுதான்'' என்று டைரக்டர் பதில் கூறி விட்டாராம். எம்.ஜி.ஆருக்கு திரும்பிப் போக மனமே இல்லையாம்.
தங்கும் விடுதிக்குப் போன பிறகு எம்ஜிஆரிடம் இயக்குநர் அதிசயித்துப் போய்க் கேட்டாராம் :
''பொழுது விடியும் முன்பே படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டோம்.
காலை முதல் கொஞ்சம்கூட ஓய்வு இன்றி மலைச் சரிவில் ஓடி ஆடி வேலை செய்தீர்களே ! களைப்பாக இல்லையா? இன்னமும் ஷூட்டிங் இருக்கிறதா என்று கேட்கிறீர்களே?''
இதற்கு எம்.ஜி.ஆர். சொன்ன பதில் :
''என்ன சார் செய்வது ?
உழைத்தால்தான் எனக்கு உற்சாகமாக இருக்கிறது !"
இப்படி சொல்லிவிட்டு சிரித்தாராம் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் சொன்ன வார்த்தைகளைக் கவனிக்கும்போது ஒன்று புரிகிறது.
எம்ஜிஆரின் அந்த உற்சாகமான உழைப்புதான், எழுத்தாளர் லா சா ரா அவர்களைப் போன்ற மேதைகள் கூடப் பாராட்டும் அளவுக்கு, மிகப்பெரும் உயரத்தில் கொண்டு போய் எம் ஜி ஆரை
நிலை நிறுத்தி இருக்கிறது.
லா ச ரா அவர்கள் வணங்கிய
அந்த உழைப்பின் சாதனையை
நானும் வணங்குகிறேன்
John Durai Asir Chelliah





















