பெட்ரோல் விலை உயர்வு - கோடைக்கால சுற்றுலாப் பயணங்களைத் தவிர்க்கும் கனடியர்கள்
கனடா
கனடாவில் கடந்த மூன்று மாதங்களில் பெட்ரோல் விலை லீட்டருக்கு 50 காசுகளுக்கு மேல் அதிகரித்துள்ளதால், நாட்டு மக்களின் கோடைக்கால சுற்றுலாத் திட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒன்டாரியோவைச் சேர்ந்த கேர் மர்பி என்பவர், கடந்த பத்து ஆண்டுகளாகத் தனது ஹோண்டா சிவிக் காரில் பல லட்சம் கிலோமீட்டர்கள் பயணம் செய்தவர். ஆனால் இந்த ஆண்டு எரிபொருள் விலை உயர்வால் தனது நயாகரா நீர்வீழ்ச்சி மற்றும் டொராண்டோ பயணங்களை ரத்து செய்துள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
"இது மீண்டும் ஒரு லாக்டவுன் காலத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது, எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமண நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் தனது சிறுதொழிலில், வாடிக்கையாளர்களுக்கு இதுவரை வழங்கி வந்த இலவச பயணச் சலுகையைத் தொடர முடியுமா என்ற நெருக்கடியும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அண்மையஆய்வறிக்கை ஒன்றின்படி, கனடாவின் 66 சதவீத ஓட்டுநர்கள் இந்த கோடைக்காலத்தில் தங்களது சாலைப் பயணங்களைக் குறைக்கவோ அல்லது முற்றிலும் ரத்து செய்யவோ திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் காரணமாக, உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) மூடப்பட்டதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ஒன்டாரியோவில் பிப்ரவரி மாதம் 1.30 டாலராக இருந்த ஒரு லீட்டர் பெட்ரோல் விலை, தற்போது சில பகுதிகளில் 1.90 டாலராக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக அமெரிக்காவிற்குச் செல்லும் எல்லை தாண்டிய பயணங்களையும் 68 சதவீத கனடியர்கள் தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலைமை நெடுஞ்சாலையை நம்பியுள்ள சிறு வணிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகளை மட்டுமே வாடிக்கையாளர்களாகக் கொண்ட 'Betty’s Pies & Tarts' போன்ற உணவகங்களின் உரிமையாளர்கள், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வியாபாரம் மந்தமாகத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.






















