அமெரிக்காவில் திடீரென கூடிய முக்கிய தலைமைகள் - ட்ரம்ப் தரப்பில் வெளியான தகவல்
போர் தொடர்பான விரிவான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரானின் முன்மொழிவு பற்றி விவாதிப்பதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்களை சந்தித்தார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
ஈரானும் அமெரிக்காவும் தங்கள் தடைகளை நீக்குவதை உள்ளடக்கியதாக கூறப்படும் திட்டம் குறித்து கேட்டபோது, செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில், "அந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
"இதுபற்றி செய்தி வெளியாகியுள்ளதால் மட்டுமே, இன்று காலை அதிபர் தனது தேசிய பாதுகாப்பு குழுவைச் சந்தித்தார் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்," என்று கூறிய அவர், ட்ரம்ப் அந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வாரா என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாக கடந்து செல்லும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி குறித்த ஈரானின் நிலைப்பாடு, அமெரிக்காவின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை என்று வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ கூறினார்.
"ஒரு சர்வதேச நீர்வழியை யார் பயன்படுத்தலாம், அதை பயன்படுத்துவதற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை ஈரானியர்களே தீர்மானிக்கும் ஒரு முறையை அவர்களால் இயல்பாக்க முடியாது; அவர்கள் அவ்வாறு இயல்பாக்க முயற்சிப்பதை நாங்களும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்," என்று அவர் கூறினார்.
ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை பிற்காலத்திற்கு ஒத்திவைப்பது தொடர்பாக ஈரான் அளித்த ஒரு முன்மொழிவு குறித்து விவாதிக்க, டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு குழுவை சந்திப்பார் என்று அமெரிக்க ஊடகமான ஆக்சியோஸ் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.






















