மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை
இலங்கை
தற்போது பல்வேறு இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக செயல்படும் நிதி மோசடிக்காரர்கள், பொதுமக்களின் வங்கி கணக்குகளை மிகவும் சூட்சுமமாக தங்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் மோசடிக்காரர்கள், மோசடிகளில் பொது மக்களை சிக்கவைக்கும் வழிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி,
வங்கி கணக்குகளை வாடகைக்கு எடுப்பது அல்லது வாங்குவது: சிறிய தொகை பணம் வழங்கி, உங்கள் பெயரில் உள்ள Password / PIN ஆகியவற்றைப் பெற்று, அவற்றை நிதி மோசடிகளில் பயன்படுத்துவது.
கமிஷன் அடிப்படையில் பண பரிமாற்றம்: உங்கள் கணக்கில் வரும் பணத்தில் ஒரு சதவீதத்தை உங்களுக்கு வைத்துக்கொள்ள அனுமதித்து, மீதியை பல கணக்குகளுக்கு மாற்றும்படி கூறுவது.
Binance மற்றும் KYC தகவல் விற்பனை: சிறிய இலாபத்திற்காக உங்கள் அடையாளத்தை (ID Card) பயன்படுத்தி Binance போன்ற கணக்குகளைத் திறந்து, அதன் தகவல்களை பிறருக்கு விற்பனை செய்யச் செய்வது.
இதில் உள்ள ஆபத்து என்ன?
இந்த அனைத்து பரிவர்த்தனைகளும் உங்கள் அடையாளத்தின் கீழ் நடைபெறுவதால், சம்பந்தப்பட்ட மோசடிகள் குறித்து பொலிஸ் விசாரணைகள் நடைபெறும் போது, முதலாவது சந்தேக நபராக அடையாளம் காணப்படுவது நீங்கள் தான். பல சமயங்களில் இவ்வாறான மோசடிகளில் அறியாமலே சிக்குபவர்கள் பாடசாலை மாணவர்கள், முதியவர்களாக இருந்தாலும், சட்டத்தின் முன் இது “குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல்” என கருதப்படும்.
இதனால் சிறைத்தண்டனைக்குப் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
நீங்கள் ஏற்கனவே அறியாமையாலோ ஏமாற்றத்தாலோ இதில் ஈடுபட்டிருந்தால்:
பிறர் பயன்படுத்துவதற்காக நீங்கள் கொடுத்துள்ள அல்லது சந்தேகமான பரிவர்த்தனைகள் நடைபெறும் உங்கள் வங்கி கணக்குகள் குறித்து உடனடியாக வங்கிக்கு அறிவிக்கவும்.
தொடர்புடைய வங்கி கணக்குகள் மற்றும் இணைய வங்கி சேவைகளை உடனடியாக முடக்க அல்லது மூட நடவடிக்கை எடுக்கவும்.
Telegram, Instagram, WhatsApp போன்ற தளங்கள் மூலம் நீங்கள் வழங்கிய Account விவரங்களை உடனடியாக நீக்கவும்.
எனவே, மோசடிக்காரர்களுக்கு துணைபுரிந்து உங்கள் வாழ்க்கையை சிறையில் முடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ள பொலிஸார், இன்றே விழிப்புணர்வுடன் இருந்து உங்கள் அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.























