எரிபொருள் தொடர்பில் கனடிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு
கனடா
கனடாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் குறைக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை (Federal Fuel Excise Tax) தற்காலிகமாக ரத்து செய்வதாகப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பின்படி, சாதாரண பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகளும் (10 cents), டீசல் லிட்டருக்கு 4 காசுகளும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரி நீக்கம் வரும் ஏப்ரல் 20-ம் திகதி தொடங்கி, செப்டம்பர் 7-ம் திகதி (Labor Day) வரை அமலில் இருக்கும். அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி இறுதியில் மோதல் தொடங்கியதில் இருந்து, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எரிபொருள் கடத்தப்படும் 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதன் விளைவாக, கனடாவின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 காசுகளுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. பிரதமர் மார்க் கார்னியின் இந்த அறிவிப்பு போதாது என்று எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) விமர்சித்துள்ளார்.
எரிபொருள் மீதான ஜிஎஸ்டி (GST) உள்ளிட்ட அனைத்து வரிகளையும் இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்ய வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என்று அவர் கூறினார்.
இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 1,200 டொலா் வரை சேமிக்க முடியும் என்று அவர் வாதிட்டார்.
இந்த வரிச்சலுகை செப்டம்பர் மாதத்திற்குப் பிறகும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு எரிசக்தித் துறை அமைச்சர் டிம் ஹாட்சன் (Tim Hodgson) பதிலளிக்கையில், "செப்டம்பர் மாதத்தில் நிலவும் நிதிச் சூழல் மற்றும் உலகளாவிய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும் என கதவைத் திறந்து வைத்துள்ளார்.
1995-ம் ஆண்டு முதல் பெட்ரோல் மீது 10 காசுகளும், 1987 முதல் டீசல் மீது 4 காசுகளும் மத்திய கலால் வரியாக வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






















