அமெரிக்காவில் புதிய அரசியல் மோதல் - டிரம்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் நகர்வு
ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் “வசந்த கால விடுமுறைக்காக” தலைநகரை விட்டு வெளியேறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு ஒரு மிக முக்கியமான போர்ச் சூழ்நிலையில் இருக்கும் போது சட்டமியற்றுபவர்கள் தங்கள் பொறுப்பை விட்டு விலகியிருப்பதாக இரு தரப்பு அரசியல்வாதிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் “முழு நாகரிகத்தையும்” அழித்துவிடுவேன் என விடுத்த எச்சரிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கருத்தை தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினர் அவர் மீது அரசியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, 25வது திருத்தச் சட்டத்தை பயன்படுத்தி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதி தன்னிச்சையாக போரை தொடங்குவதை கட்டுப்படுத்தும் முக்கிய சட்டமாக “போர் அதிகாரச் சட்டம்” (War Powers Act) குறிப்பிடப்படுகிறது.
இந்தச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றி ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளை தொடர முடியாது. கடந்த மார்ச் மாத தொடக்கத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது படையெடுத்ததாக ட்ரம்ப் அறிவித்தபோது, இந்த அதிகாரக் கட்டுப்பாட்டு தீர்மானம் தோல்வியடைந்தது.
இருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் மீண்டும் ஒருமுறை அடையாளப் பூர்வமாக அதே தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர உள்ளனர்.
இந்த முயற்சி நிறைவேறும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், போரை நிறுத்த வேண்டும் என விரும்பும் அமெரிக்க மக்களுக்கு இது ஒரு அரசியல் செய்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















