ஈரானில் மிகப் பெரிய பாலத்தை தகர்த்த அமெரிக்கா ஏவுகணை
ஈரானில் உள்ள மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ளார்.
நேற்று (2) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 95 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
ஐந்து வாரங்களாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர உடன்படாவிட்டால் ஈரானை கற்காலத்துக்குத் தள்ளுமளவுக்கு பாரிய குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்த அடுத்த நாளே இந்தப் பாலம் தாக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய நகரங்களை இணைக்கும் புதிய கட்டுமானமான இந்தப் பெரிய பாலம் 136 மீட்டர் உயரம் கொண்டது. இதன் மதிப்பு சுமார் 400 மில்லியன் டொலர். ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்தது. இது இனி ஒருபோதும் பயன்படுத்தப்படாது.
ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இன்னும் பல தாக்குதல்கள் தொடரும் என ட்ரம்ப் தனது ட்ருத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.























