பெருந்தொகையான அலங்கார செடிகளுடன் இளைஞர் ஒருவர் கைது
இலங்கை
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலங்கார மலர்ச் செடிகளுடன் இலங்கை பயணி ஒருவர் இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் உயிர்ப்பல்வகைமை, கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இணைந்து இந்தச் சோதனையை முன்னெடுத்த நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 12.35 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸின் TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் அவர் கொண்டு வந்த 3 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 386 அலங்கார மலர்ச் செடிகள் கைப்பற்றப்பட்டன.
பிலோடென்ட்ரான் (Philodendron), அக்லோனிமா (Aglaonema), அலோகாசியா (Alocasia) மற்றும் மொன்ஸ்டெரா (Monstera) ஆகிய அரிய வகைச் செடிகள் இதில் அடங்கியுள்ளன.
இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





















