• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீகமும், சட்டபூர்வமான பொறுப்பும் உள்ளது- மனோ கணேசன்

இலங்கை

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கை கொழும்பில் சந்தித்தபோது, மலையக தமிழர் மற்றும் ஈழத்தமிழர் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை அவர் மிகத் தெளிவாக எடுத்துரைத்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய தூதுவரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில், ஜனநாயக மக்கள் முன்னணியின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான இணைத் தலைவர், தமுகூ அரசியல் குழு உறுப்பினர் பாரத் அருள்சாமியும் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பு தொடர்பில், மனோ கணேசன் தனது எக்ஸ் தளம் உட்பட ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்தில், மலையக தமிழர் பிரச்சினை வரலாற்றுச் சுமையுடன் தொடர்புடையது என சுட்டிக்காட்டினார்.

பிரித்தானிய வர்த்தக நலன்களுக்காக, இலங்கையில் பெருந்தோட்டங்களை நிறுவ, தென் இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்களின் வம்சாவளிகளே இன்றைய மலையக தமிழர்கள். ஆகவே, அவர்களுக்கெதிரான சமூக, பொருளாதார அநீதிகளுக்கு பிரித்தானியாவுக்கு தார்மீகமும், சட்டரீதியான கடப்பாடும் இருப்பதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்றைய அரசு முன்னெடுக்கும் ரூபா 50 இலட்ச “தித்வா” மீள் கட்டுமான வீடமைப்பு மற்றும் காணி வழங்கல் திட்டங்களில், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கண்டி, பதுளை, நுவரேலியா, மாத்தளை, கேகாலை போன்ற மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பெருந்தோட்ட மக்கள், தேசிய இடர் நிவாரண நிலையத்தின் கீழ் கொண்டு வரப்படாமல், ரூபா 27 இலட்ச இந்திய உதவி வீடமைப்பு திட்டங்களுக்குள் தள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மலையகப் பகுதியில் காணி உரிமையை மறுத்து, தொடர்மாடிக் கட்டடங்கள் அமைக்கும் அரசாங்கத்தின் இரகசிய திட்டங்களை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், காணி உரிமை மறுக்கப்படும் எந்த திட்டத்திற்கும் எதிராக மக்கள் போராட்டங்களை அமைப்போம் என்றும் அவர் எச்சரித்தார்.

ஜனாதிபதி அனுர திசாநாயக்க, மலையக மக்களின் விசேட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட நேரம் ஒதுக்கவில்லை என்றும், தனது இருபது வருட நண்பரான ஜனாதிபதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி அனுப்பிய மின்னஞ்சலுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் மனோ கணேசன் கூறினார்.

ஜனாதிபதி அடிக்கடி வடக்கு பகுதிகளுக்கு சென்று வரினும், அவர் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என மனோ கணேசன் குற்றம் சாட்டினார்.

அத்துடன் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படவில்லை. மாகாண நிர்வாகம் ஆளுநர்கள் மூலமே தொடர்கிறது.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை. காணி விடுவிப்பு நின்று போயுள்ளது. நீண்டகால அரசியல் கைதிகளாக உள்ள பன்னிரெண்டு பேரை விடுவிக்க அரசு மறுக்கிறது. புதிய அரசியலமைப்பு தொடர்பான பேச்சுகள் அலங்கார வார்த்தைகளாகவே நிற்கின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, மலையக தமிழர் மற்றும் ஈழத்தமிழர் தொடர்பில், சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகளுக்கு பிரித்தானியா தலைமைப் பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான அரசியல், சமூக, மனித உரிமை கோரிக்கைகள் நிறைவேற உதவ வேண்டும் என, பிரித்தானிய உயர் ஸ்தானிகரிடம் தாம் கோரியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply