காலத்தால் அழியாத கானம் - ஒரு பக்கம் பார்க்கிறா
சினிமா
காலத்தால் அழியாத கானம்: திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில், டி.எம்.எஸ் குரலில், எம்ஜிஆர் நடிப்பில் 'ஒரு பக்கம் பார்க்கிறா'
எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்த 'மாட்டுக்கார வேலன்' திரைப்படம் யாழ் ராணி திரையரங்கில் வெளியானபோது, ஓவியர் மணியத்தின் கை வண்ணத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் 'கட் அவுட்டு'கள் இவை. படத்தில் வரும் 'ஒரு பக்கம் பார்க்கிறா' பாடற் காட்சியினைப்பிரதிபலிக்கும் 'கட் அவுட்டு'கள்.
தமிழ்த்திரையுலகில் அதிகமான இரட்டை வேடங்களில் நடித்தவர் எம்ஜிஆராகத்தானிருக்க முடியும். அவரது இரட்டை வேடப் படங்களில் பெரும்பாலானவை பெரு வெற்றியினை ஈட்டியவை. நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, குடியிருந்த கோயில், நாளை நமதே, மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், ஆசை முகம், பட்டிக்காட்டுப் பொன்னையா , உலகம் சுற்றும் வாலிபன். இவை நானறிந்தவை.
இவற்றில் 'நாடோடி மன்னன்' அவரைத் தமிழ்த்திரையுலகின் முடி சூடா மன்னனாக்கியது. அத்துடன் அவரது எதிர்கால அரசியலுக்கும் அடித்தளமிட்டுக்கொடுத்தது. 'எங்க வீட்டுப் பிள்ளை' அவரைத் தமிழ் மக்கள் அவரைத் தங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைக்க வைத்தது. 'உலகம் சுற்றும் வாலிபன்' மிகுந்த அரசியல் ரீதியிலான எதிர்ப்புகளுக்கு மத்தியில், விளம்பரங்கள் எவையுமில்லாமல் வெளிவந்து பெரு வெற்றியீட்டியதுடன் அவரது அரசியல் வெற்றிக்கும் வழி வகுத்தது. இவை மூன்றுமே வெள்ளி விழாத்திரைப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'மாட்டுக்கார வேலனி'ல் வரும் , இங்குள்ள 'கட் அவுட்' பிரதிபலிக்கும் 'ஒரு பக்கம் பார்க்கிறா' பாடல் படம் வெளிவந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்ட பாடல். டி.எம்.எஸ்ஸின் குரலும், கே.வி.மகாதேவனின் இசையும், எம்ஜிஆரின் ,குறிப்பாக மாட்டுக்கார வேலனாக வரும் எம்ஜிஆரின் நடிப்பும் இப்பாடலை மறக்க முடியாத பாடலாக மாற்றி விட்டன.
இப்புகைப்படம் இரண்டு விடயங்களை ஆவணப்படுத்துகின்றது: ஒன்று - ஓவியர் மணியத்தின் 'கட் அவுட்'. அடுத்தது: தற்போது இல்லாதுபோன யாழ் ராணி திரையரங்கு. எங்களை அக்காலகட்டத்துக்கே தூக்கிச் செல்லும் காலக்கப்பலாகவும் இப்புகைப்படம் உள்ளது. அவ்வகையிலும் முக்கியத்துவம் மிக்கது.
இது போன்ற 'கட் அவுட்'டுகள் குறிப்பிட்ட காலகட்டத்தை நினைவூட்டும் அழியாத வரலாற்றுச் சின்னங்கள். இவை முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இவை ஒரு காலத்தில் சிறுவர்களான எம்மையெல்லாம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய 'கட் அவுட்டு'களல்லவா.
மாட்டுக்கார வேலன் யாழ் ராணியிலும் , கொழும்பிலும் 100 நாட்களைக் கடந்து ஓடிய திரைப்படம்.
இந்தக் 'கட் அவுட்' காட்சிக்குரிய இனிய , சுவையான பாடல்: https://www.youtube.com/watch?v=qLOF3vWfoGM
Navaratnam Giritharan






















