சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே! - தியாகராஜ பாகவதர்
சினிமா
தங்க நிறம், கோதுமை நிறம், நிலவொளி வீசும் முகம், மயக்கும்பார்வை, என்று ஒரு பெண்ணை வர்ணிப்பதுபோலவே எல்லோராலும் வர்ணிக்கப்பட்டார் எம்.கே.டி. அந்த அளவிற்கு வசீகரம் கொண்டிருந்தார்.
எல்லோரையும் வசீகரிப்பதற்கு என்றே அழகுக்கே அழகூட்டும் விதமாக பல மணிநேரம் மெனக்கெட்டிருக்கிறார். தினமும் காலையில் வெந்நீரில் பன்னீர் ஊற்றிக்கலந்து, குளித்திருக்கிறார். அரைத்த சந்தனம், சவ்வாது, புனுகு, அத்தர் போன்ற இயற்கை மணம் நிறைந்த வாசனை திரவியங்களை உடலில் பூசிக்கொண்டு, பட்டுவேட்டி- சட்டை, அங்கவஸ்திரம் அணிவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.
தினமும் புத்தாடைதான் அணிவது என்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார் என்ற பேச்சும் இருக்கிறது.
’யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பது மாதிரி, காற்றில் கலந்துவரும் நறுமணத்தை வைத்தே எம்.கே.டி. வருகிறார் என்று உணர்ந்துகொள்வார்கள். எம்.கே.டி. வந்துவிட்டு போனபின்னரும் கூட நீண்ட நேரத்திற்கு அந்த இடத்தில் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும் என பூரித்துச்சொல்கிறார்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அழகில் ஆண்களும் பெண்களும் மயங்கிக்கிடந்தார்கள். அந்த எம்.ஜி.ஆரே ஒரு காலத்தில் எம்.கே.டியின் அழகில் சொக்கிக்கிடந்தார் என்போருமுண்டு.
இப்பேர்பட்டவர் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமி காந்தன் கொலை வழக்கில் தண்டனை பெற்று பின்னர், விடுவிக்கப்பட்டார்.
பாகவதருக்கும், கிருஷ்ணனுக்கும் பிரபல வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் பார்-அட்-லா ஆஜரானார். ஆணித்தரமாக வாதாடி, பாகவதரும், கிருஷ்ணனும் குற்றமற்றவர்கள் என்று நிரூபித்தார். இருவரும் விடுதலை அடைந்தனர்.
பாகவதர் தன் அன்பின் அறிகுறியாக 100 பவுனில் ஒரு தங்கத்தட்டு செய்து, அதை எத்திராஜுக்கு வழங்கினார். “நீங்கள் எப்போதும் இதில்தான் சாப்பிடவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே, எத்திராஜும் வாழ்நாள் முழுவதும் அந்த தட்டில்தான் சாப்பிட்டு வந்தார்
அதன்பின்னர் அவரது படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நடிப்பில் இருந்து விலகி இருந்த அவருக்கு, ஈரல் நோய் பாதிப்பு ஏற்பட்டது.
அவர் கடைசியாக சிவகாமி படத்தில் நடித்தார். அந்த படத்தின இறுதி காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காடசிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார்.
கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்க தடுமாறினார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இறுதியில் 1959-ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னை அரசு பொதுமருத்துமனையில் காலமானார்.
எம் கே டி போல் வாழ்ந்தவரும் இல்லை தாழ்ச்சி அடைந்தவரும் இல்லை
கடைசி காலத்தில் வாடகை வீட்டில்
வாடகை கூட தர இயலாத நிலைக்கு
தள்ளப்பட்டார்.
அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட ஒரே புகழ் பெற்ற நடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.
சினிமாக்காரர்கள் அவரிடம் காட்டிய மோசமான அணுகுமுறையால் ரொம்பவே மன வருத்தத்தில் இருந்திருக்கிறார். தனது கடைசி காலம் வரைக்கும் அந்த மன வலியைச் சுமந்தவர், மரணப்படுக்கையில் இருக்கும் போது தனது தம்பியை அழைத்து, ‘நான் இறந்தப்பிறகு என்னுடைய உடலை சினிமாக்காரர்களிடம் மட்டும் கொடுத்து விடாதே’ என்று கூறியிருக்கிறார். தியாகராஜ பாகவதர் இறந்தப்பிறகு தங்கவேலு, பாலையா, எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர் என பல நடிகர்கள் கேட்டும் பாகவதரின் தம்பி உடலைக் கொடுக்காமல், தங்களது சொந்த ஊரான திருச்சியில் நல்லடக்கம் செய்தார்.
ஏழ்மை காரணமாகப் பாகவதரின் குடும்பம் சிதைந்து சின்னாபின்னமாகி விட்டது. அவரது இரண்டாம் மனைவியான ராஜம்மாளின் குடும்பத்திற்கு 2010ல் பாகவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட சமயத்தில் அவருக்கு ஒரு சிறிய தொகை அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அதுவரை அந்தக் குடும்பம் வாழ்ந்து வந்தது நடிகர் சிவகுமார் அவ்வப்போது செய்து வந்த உதவிகளால் தானாம்
- பிரசாந்த்!.























