அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கை
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச். பௌஸ் நெறிப்படுத்தலில் இன்று (04) நடைபெற்றது.
இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியது என 78 ஆவது சுதந்திர தின உரையில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எம்.ரஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.
சுதந்திர தின நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், வலய கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இலங்கையின் 78வது சுதந்திர தின நிகழ்வும், 2025 சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான விடுகை விழாவும், பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் ரிப்ஹா அன்சார் அவர்களின் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திர தினத்திற்கு உரிய மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமானது.
அத்துடன், சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் வழிகாட்டலில் முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் அப்துல் மஜீட் ஞாபகார்த்த ஜனாஸா மண்டப வளாகத்தில் இன்று (04) இடம்பெற்றது.
தேசியக்கொடி ஏற்றி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் நினைவு கூர ப்பட்டதுடன், நாட்டு மக்கள் அனைவரும் சமாதானமும் சௌபாக்கியத்துடன் வாழ வேண்டி விசேட துஆப் பிரார்த்தனை மற்றும் மையவாடி வளாகம் கனரக வாகனங்களின் உதவியுடன் மரங்கள் மற்றும் பற்றைக்காடுகள், புல் பூண்டுகள் வெட்டப்பட்டு துப்புரவு செய்யப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.வினோகாந், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், சனசமூக நிலையங்களின் பிரதிநிகள், சமூக மட்ட பிரதிநிதிகள், நம்பிக்கையாளர் சபை நிர்வாகிகள், முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊழியர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று பொத்துவில் பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் பிரதேச செயலாளர் அவர்களால் சுதந்திர தினத்தையொட்டி மர நடுகை நிகழ்வுகள் இடம்பெற்றன.
அத்துடன் பிரதேச செயலாளர் அவர்கள் அரசாங்கத்தினுடைய தேசிய கொள்கை திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பிரதேச மற்றும் நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் சுதந்திர தின உரையினை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம். எம்.சுபைர் , சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர், நிதி உதவியாளர் உட்பட கிளை தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






















