• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் நாகேஷ் நினைவு தின சிறப்பு பதிவு

சினிமா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா - பாலச்சந்தரின் நீர்க்குமிழி ! ஏஜிஎஸ் அலுவலகத்திற்கு கே.பி.,யை பார்க்க வரும்போதே நாகேஷூக்கு 2 படங்கள் வெளி வந்து விட்டன. எப்படியாவது உன் ‘ட்ரூப்’ல சேத்துக்க பாலுன்னு உயிரை எடுப்பார் நாகேஷ். இப்ப வேஷம் ஒண்ணும் இல்லடான்னாரு கே.பி. ‘அட, சார்! போஸ்ட்!’ன்னு நீங்க நாடகத்தில தலைகாட்டறீங்களே அதை நான் செய்யறேன்!’ அப்படின்னாரு நாகேஷ். சார் போஸ்ட்’ வசனத்துக்கு மேல ஒரு வார்த்தை கூட அவர் பேசலே. ஆனால் மேடையில் நுழைந்து தபால் பையை தவற விட்டு கிரிக்கட் பாலைப் பிடிப்பதைப் போல பாய்ந்து பிடித்து குட்டிக்கரணம் அடித்து பிறகு, ‘சார் போஸ்ட்!’ என்றார். அரங்கமே அதிர்ந்தது. அவ்வளவு பிரபல நடிகரான பிறகும் -டிராமா நடக்கும் அன்று மத்தியானம் ஒரு மணிக்கு மேல ஷூட்டிங் வச்சுக்காம, சாப்பிட்டு நேரா ஹாலுக்கு வந்து ஃபேன்-ஐ போட்டுட்டு மேக்கப் ரூம்ல நல்லா தூங்குவார். சரியா 5 மணிக்கு எழுந்து ஃபிரெஷ் ஆயிடுவார். ஸ்டேஜ்ல எல்லா உதவியும் செய்வார்.
நாகேஷ் இல்லை என்றால் கே.பி., இல்லை. கே.பி இல்லை என்றால் நாகேஷ் இல்லை என்ற கட்டமும் வந்தது.
அப்பேர்பட்ட நாகேஷ் சொல்லாமல் ஒருமுறை எம்ஜிஆர் படத்தின் படப்பிடிப்புக்குப் போய் விட்டார். என் தேதியில் எப்படி அவன் அங்கு போகலாம் என்று தேங்காய் சீனிவாசனை அழைத்து அந்த வேடத்தில் நடிக்க வைத்து பல ஆண்டுகள் பிரிந்தே இருக்க வைத்தது காலம்.
சினிமா அனுபவமே இல்லாத ஏ.கே. வேலன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற ஒரு படத்தை எழுதி இயக்கி தயாரித்து வெளியிட்டார்.
அந்த வேலன், உங்ககிட்ட ஏதாவது கதை இருக்கா-ன்னு கே.பி.யிடம் கேட்டார். நீர்க்குமிழி-ன்னு ஒரு நாடகம். கேன்சர் பேஷண்ட்டைப் பத்தி எழுதியிருக்கேன். முதல்ல அதை நாடகமா போடணும் என்றார் கே.பி. நாடகம் அரங்கேற்றம் பண்ணீட்டு அதை நீங்களே டைரக்ட் பண்ணிடுங்க. நான் படத்தை தயாரிக்கிறேன் -வேலன்.
நாகேஷ், மேஜர், செளகார், வி.கோபாலகிருஷ்ணன், ஐஎஸ்ஆர் -எல்லாம் ஒப்பந்தமானார்கள்.
‘நாடகத்துக்கு இசையமைக்கிற குமாரையே மியூசிக் டைரக்டரா போட்டுக்கலாம்!’ பூஜை போட்டு உவமைக்கவிஞர் சுரதா எழுதிய, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா- ஆறடி நிலமே சொந்தமடா!’ -பாடல் எழுதியாயிற்று. என்ன காரணமோ எந்திரக்கோளாறோ. பணம் புரட்ட முடியவில்லையோ? பாடல் ரத்தானது.
‘படத்துக்குப் பேர் ‘நீர்க்குமிழி’. பாட்டு ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா!’ எப்படி வெளங்கும்?’ திரையுலகினர் கிண்டல். எந்தக்காரணம் கொண்டும் நீர்க்குமிழி -பெயரையும் மாற்றக்கூடாது; ஆடி அடங்கும் பாடலையும் விடக்கூடாது என்று பிடிவாதமாகச் சொன்னார் ஏ.கே.வேலன்.

படத்தில் வி. குமாரின் இசை அமைப்பில் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. ஜெயந்தியுடன் நாகேஷ் ஆடும் ‘கன்னி நதி ஓரம்...’ என்னும் டூயட் பாடல். இது ஆலங்குடி சோமு எழுதியது. ராக் அண்ட் ரோல் பாணியில் உடம்பை ஒரு ரப்பர் பேண்ட் போல் வளைத்து நாகேஷ் ஆடும் நடனம் அன்றைய தமிழ் சினிமாவில் நிச்சயம் தனித்துவமானது. இப்போது பார்க்கும்போதும் ரசிக்க முடிகிறது.
இன்னொரு பாடலின் பல்லவி வரிகளைச் சொன்னாலே நம் எல்லோர் மனதும் முணுமுணுக்கும்: ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா’. கூர்மையும் தனித்துவமும் பொருந்திய மரபுக் கவிஞராக விளங்கிய உவமைக் கவிஞர் சுரதாவின் வரிகள், எளிமையும் இயல்புமாக வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்துகின்றன. நாகேஷின் உடலுக்கு சீர்காழி கோவிந்தராஜனின் துயரக் குரல் அப்படியே பொருந்திப்போகிறது. இந்தப் பாட்டில் வெளிப்படும் நாகேஷின் முகபாவங்களும் உடல்மொழியும் ஆரவாரமற்ற அண்டர் பிளே அற்புதம்! புற்று நோயாளியான சேதுவின் ஒரே சொந்தபந்தம் கள்ளங்கபடமற்ற அவனுடைய நகைச்சுவை உணர்வுதான். மரணத்தை நாட்கணக்கில் நெருங்கும் அவன், அதையறியாது செய்யும் சேட்டைகள், ஒரு பக்கம் சிரிப்பையும் இன்னொரு பக்கம் அனுதாபத்தையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். கே.பி. வார்த்த இந்தப் பாத்திரப் படைப்பின் வெற்றிதான் இந்தப் படத்தின் வெற்றி. அங்கதம் வழியும் இயல்பான முகபாவங்களாலும் குறும்பு கொப்பளிக்கும் உடல் மொழியாலும் நாகேஷ் படம் நெடுகிலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியுள்ளார்.
இந்தப் படத்தின் நடன இயக்குநர், பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர். ஏ.ஆர். ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகர் இதில் இணை இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இசை வி.குமார். ஒளிப்பதிவு நிமாய் கோஷ். அந்தக் காலத்துக் குறைந்த பட்ஜெட் படமான ‘நீர்க்குமிழி’ ஒரு வெற்றிப் படம். படத்தின் ஹைலைட் என்றால் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடலும் நாகேஷின் நடிப்பும்தான். சென்னை கெயிட்டி தியேட்டரில் அந்த நாட்களில் தொடர்ந்து 80 நாட்கள் ஓடியது.
நட்சத்திர நடிகர்களின் படங்களில் நகைச்சுவை ஊறுகாயாக மட்டும் தொட்டுக்கொள்ளப்பட்ட நாகேஷ் என்னும் நடிகனின் பன்முக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதில் இயக்குநர் கே.பாலசந்தரின் பங்களிப்பு முக்கியமானது. அவரின் இயக்கத்தில் உருவான முதல் படமான ‘நீர்க்குமிழி’ காலங்களைக் கடந்து, ரசிக நெஞ்சங்களில் உடையாமல் நிற்கும் என்பது உறுதி! இந்து தமிழ் திசை இதழில் எஸ்.. ராஜகுமாரன்

 


 

Leave a Reply