• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது - புதிய இணையவழி கட்டண முறைமை ஆரம்பம்

இலங்கை

பேலியகொட மெனிங் சந்தையின் அன்றாட நிதிப் பரிமாற்றங்களை முறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் (UDA) அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இணையவழி கட்டண முறைமை (Online Payment System), இன்று (02) காலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ பொறியியலாளர் எரங்க வீரரத்ன மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ எரங்க குணசேகர ஆகியோரின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

fmis.uda.lk என்ற இணையதள நுழைவாயிலின் ஊடாகச் செயற்படும் இந்த நவீன முறைமையின் மூலம், சந்தையிலுள்ள வர்த்தக சமூகம் இனிவரும் காலங்களில் தமது வரிப் பணம் மற்றும் ஏனைய அன்றாடக் கொடுப்பனவுகளைத் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி மிக இலகுவாகச் செலுத்த முடியும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர், இலங்கையின் முன்னணி மொத்த வர்த்தக மையமான மெனிங் சந்தை (Manning Market) இவ்வாறு டிஜிட்டல் மயமாக்கப்பட்டமையானது, அரசாங்கத்தின் தேசிய டிஜிட்டல் உருமாற்ற மூலோபாயத்தின் (National Digital Transformation Strategy) கீழ் எட்டப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும் எனக் குறிப்பிட்டார். 

பணமற்ற கொடுக்கல் வாங்கல் முறையை (Cashless payment) அறிமுகப்படுத்துவதன் மூலம் வர்த்தக சமூகம் தமது வர்த்தக நடவடிக்கைகளில் நேரத்தைச் சேமிக்க முடிவதுடன், வரிசைகளில் காத்திருக்கும் அசௌகரியங்களைத் தவிர்த்து, கொடுப்பனவுகளில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மை மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின் ஒரு சிறப்பம்சமாக, மெனிங் சந்தையின் (Manning Market)  பல கடை உரிமையாளர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாக புதிய முறைமையைப் பயன்படுத்தி நேரடி நிதிப் பரிமாற்றங்களை மேற்கொண்டு அதன் செயற்பாட்டினைச் செய்துகாட்டினர். 

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த முறைமையை, எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய பொருளாதார மையங்களுக்கும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
 

Leave a Reply