கனடாவில் பணவீக்கம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கனடா
கனடாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் காபி விலை 30 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், புதிய அல்லது உறைபதன மாட்டிறைச்சியின் விலை 16.8 சதவீதம் உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, பெட்ரோல் விலையில் 13.8 சதவீத சரிவு ஏற்பட்டது.
உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் அதிக அளவில் கிடைப்பதே பெட்ரோல் விலை குறைவதற்கான முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
வான்வழி போக்குவரத்து செலவுகள் ஆண்டு அடிப்படையில் சற்றுக் குறைந்திருந்தாலும், மாதாந்த அடிப்படையில் விமான டிக்கெட் கட்டணங்கள் 34.5 சதவீதம் உயர்ந்துள்ளன.
இது கடந்த ஆண்டின் விடுமுறை கால விலை உயர்வை விடவும் அதிகமாகும். அதேபோல், சுற்றுலா பயணத் திட்டங்களின் (travel tours) செலவும் மாதாந்த அடிப்படையில் உயர்ந்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவுக்கான சுற்றுலா இடங்களின் விலை உயர்வே இதற்குக் காரணம் என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த டிசம்பர் மாத பணவீக்கத் தரவுகள், கனடா மத்திய வங்கி அடுத்த வாரம் எடுக்கவுள்ள இந்த ஆண்டின் முதல் வட்டி விகித முடிவுக்கு முன்பான இறுதி விலை நிலவரமாகும்.
கடந்த டிசம்பரில் கனடா மத்திய வங்கி தனது அடிப்படை வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாக நிலைநிறுத்தியிருந்தது.
இதேவேளை, வரி விடுமுறை காரணமாக மொத்த பணவீக்க எண்ணிக்கைகள் உயர்ந்திருந்தாலும், மத்திய வங்கி கவனமாக கண்காணிக்கும் அடிப்படை (core) பணவீக்க அளவுகள் தற்போது மிதமடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.






















