• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நல்லவராக நம்பியார், வில்லனாக எம்ஜிஆர்... ரசிகர்களை கிளர்ச்சியூட்டிய நினைத்ததை முடிப்பவன்

சினிமா

அனைவரும் விரும்பும் வகையில் ஒரு வணிக சினிமாவை எப்படி எடுக்க வேண்டும் என்பதை நினைத்ததை முடிப்பவனை பார்த்து கற்றுக் கொள்ளலாம்.

எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்தப் படங்கள் சோடைப் போனதில்லை. 1975 மே 9-ஆம் தேதி வெளியான நினைத்ததை முடிப்பவன் படத்தில் எம்ஜிஆர் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்தது

பொதுவாக இரண்டு வேடங்கள் என்றால் இருவரும் சகோதரர்களாக இருப்பார்கள். நினைத்ததை முடிப்பவனில் இரண்டு எம்ஜிஆர்களும் சகோதரர்கள் அல்ல. ஒருவர் கிராமத்தில் பேண்ட் வாசிக்கும் அப்பாவி. இன்னொருவர் வைர வியாபாரி. அவர்தான் வில்லனும்கூட. வைர வியாபாரிதான் அடிக்கடி நடக்கும் வைரத் திருட்டுக்கு காரணம் என வில்லன் எம்ஜிஆரை சந்தேகப்படும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நம்பியார். அனேகமாக எம்ஜிஆர் படங்களில் நம்பியார் நல்லவராகவும், எம்ஜிஆர் வில்லனாகவும் நடித்தது இந்த ஒரு படமாகத்தான் இருக்கும். ஆனாலும், ஹீரோ நம்பியார் இல்லை. கிராமத்து அப்பாவி எம்ஜிஆரும், வில்லன் எம்ஜிஆரும்தான் ஹீரோக்கள். ஏனெனில் இவர்களுக்குதான் இளமையான ஜோடிகள் படத்தில் இருக்கிறார்கள்.

எம்ஜிஆர் படங்களை மக்கள் அதிகளவில் ரசிக்க காரணம், நல்லவன் ஜெயிப்பான் என்ற நேர்மறை கதையும், தாய், தங்கை சம்பந்தப்பட்ட சென்டிமெண்ட் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் என்போர் உண்டு. அவர்கள் சொல்ல விட்டுப்போகும் இன்னொரு பிரதான காரணம் கவர்ச்சி. அந்தக் காலத்தில் எம்ஜிஆர் படங்கள் அளவுக்கு நாயகிகளை கவர்ச்சியில் குளிப்பாட்டிய படங்கள் வேறில்லை. நினைத்ததை முடிப்பவனில் ஒன்றுக்கு இரண்டு பேர். மஞ்சுளா மற்றும் லதா.

இந்த இரண்டு பேரும் எழுபதுகளின் ஆரம்பத்தில் நடிக்க வந்தவர்கள். 1975-ல் நினைத்ததை முடிப்பவன் வெளியான போது லதாவின் வயது 22. மஞ்சுளாவுக்கு 21. படத்தில் இவர்களின் காதலராக வந்த எம்ஜிஆருக்கு வயது 58. இந்த வயது வித்தியாசம் பாடல் காட்சிகளிலும், பிற காட்சிகளிலும் தெரியாத அளவுக்கு புகுந்து விளையாடியிருந்தார். முக்கியமாக மஞ்சுளாவுடன், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடல் காட்சி. எம்எஸ்வி இசையில் வாலி எழுதிய இந்தப் பாடலின் சிச்சுவேஷன்படி, எம்ஜிஆர், மஞ்சுளா இருவரும் போதையேற்றப்பட்டிருப்பார்கள். அந்த போதையுடன் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ரசிகர்களை சூடேற்றுவார்கள்.

. நினைத்ததை முடிப்பவன் படத்துக்கு, கலாச்சாரத்தில் கறாராக இருக்கும் கல்கி பத்திரிகை பின்வருமாறு விமர்சனம் எழுதியது.

'கவர்ச்சிக்கு ஒரு லதாவும், காட்சிக்கு ஒரு மஞ்சுளாவும் படம் முழுவதும் வளைய வந்து ரசிகர்களை மகிழ்விக்கின்றனர். மஞ்சுளாவும், லதாவும் கொள்ளையிட்டவன் என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்து அழகு நடனமும் ஆடுகின்றனர். மஞ்சுளாவின் குளியல் அறைக் காட்சியும் இருக்கிறது. படம் பார்த்து மகிழ விரும்பும் ரசிகர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?'

கல்கி சொல்வதைப் போல் வேறு என்ன வேண்டும்? லதா, மஞ்சுளா கவர்ச்சிக்காகவே இளைய ரத்தங்கள் மறுபடி மறுபடி நினைத்ததை முடிப்பவனை பார்த்தனர். படமும் வெற்றி பெற்றது.

Kalimuthu Raj

Leave a Reply