சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச
இலங்கை
கல்வியமைச்சர் ஹரணி அமரசூரிய பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த சத்தியாகிரப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில்,
புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுத்திருந்த தனது சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இந்த சத்தியாகிரகத்தை ஆரம்பித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.
இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் வாசலுக்கு முன்பாக கூடாரம் ஒன்றை அமைப்பதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டிருந்தனர்.
இதன்போது, கூடாரத்தை அகற்றுமாறு பொலிசார் அறிவுறுத்தியிருந்த நிலையில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை புதிய கல்வி சீர்திருத்தத்தை ஒத்திவைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தையடுத்து, தனது போராட்டத்தைக் கைவிடுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளமை குறிப்பிப்பிடதக்கது.






















