• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிரம்ப் மிரட்டல் எதிரொலி- அமெரிக்காவை தாக்குவோம் என ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே மோதல் நடந்தது. இதில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த மோதலில் 8 பேர் பலியானார்கள்.

இதற்கிடையே அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை பயன்படுத்தினால், அமெரிக்க அரசு களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் டிரம்ப்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் ஆலோ சகர் அலி ஷாம்கானி கூறுகையில்," ஈரானின் பாதுகாப்பு என்பது யாராலும் தாண்டக்கூடாத சிவப்பு கோடு. இதை மீறி வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டு விஷயத்தில், பாதுகாப்பில் தலையிட நினைத்தால் அவர்களின் கை துண்டிக்கப்படும். ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் காசாவில் அமெரிக்காவின் தலையீடு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை ஈரான் மக்கள் நன்கு அறிவார்கள்" என்றார்.

ஈரானின் தேசிய பாது காப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கூறும் போது,"ஈரானில் போராட் டங்களை அமெரிக்காவும், இஸ்ரேலும் தூண்டி விடு கின்றன. எங்களின் உள்நாட்டுப் பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுவது முழுப் பிராந்தியத்திலும் குழப்பத்திற்கும் அமெரிக்க நலன்களின் அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதை டிரம்ப் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

அதேபோல் ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் கூறும்போது, அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களும் படைகளும் சட்ட பூர்வமான இலக்குகளாக மாறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே ஈரானின் ஐ.நா. தூதர் அமீர் சயீத் இரவானி, ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு சபைத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள சட்ட விரோத அச்சுறுத்தல்களை ஐ.நா. சபை கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். அந்த அறிக்கைகள் ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்" என்றும் கூறி உள்ளார்.

அந்தக் கடிதத்தில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், ஈரான் தற்காப்பு உரிமையை உறுதியாக பயன்படுத்தும் என்று கூறி உள்ளதாகத் தெரிகிறது.
 

Leave a Reply