வெனிசுலாவின் எதிர்காலத்தை இனி அமெரிக்காவே தீர்மானிக்கும் - எண்ணெய் இருப்பை நாங்களே நிர்வகிப்போம் - டிரம்ப்
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.
இதன்பின் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், மதுரோ மற்றும் அவரின் மனைவி அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்ட்டு நாடுகடத்தப்பட்டதாக அறிவித்தார்.
அமெரிக்காவில் மதுராவுக்கு எதிராக எதிராக போதை பொருள் பயங்கரவாத சதி திட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இருவரும் அமேரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.
அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டிரம்ப் Fox news சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது,
"வெனிசுலா இப்போது சுதந்திரமான நாடு. ஒரு பயங்கரமான சர்வாதிகாரி பிடிபட்டுள்ளார். மதுரோவும் அவருடைய மனைவியும் இப்போது ஒரு கப்பலில் நியூயார்க் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் பிடியில் உள்ளனர்.
வெனிசுலாவில் உள்ள எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்கா இனி மிகவும் வலுவாக ஈடுபடும். அந்த எண்ணெய் வளங்கள் உண்மையில் எங்களுடையவை. அமெரிக்க நிறுவனங்கள் அவற்றை உருவாக்கின, ஆனால் அந்த நிறுவனங்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டன.
அவர்கள் எங்களது எண்ணெய் உரிமைகளைப் பறித்தார்கள். நாம் அங்கிருந்து வெளியேறும்போது அந்த எண்ணெயை அப்படியே விட்டு வந்திருக்கக்கூடாது. நாமே அதை எடுத்திருக்க வேண்டும்.
இப்போது நாம் அந்த எண்ணெயை மீட்கப்போகிறோம். வெனிசுலாவிடம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு உள்ளது. இனி அதை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் நிர்வகிக்கும்.
இதன் மூலம் நமது நாட்டு மக்களுக்குக் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும், மேலும் வெனிசுலா மக்களும் வறுமையிலிருந்து மீட்கப்படுவார்கள்.
இது ஒரு புதிய விடியல். நாங்கள் எங்களது சொத்துக்களைத் திரும்பப் பெறுகிறோம். மதுரோ தனது குற்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. வெனிசுலா மக்கள் இனி நிம்மதியாக வாழலாம்.
இனி வெனிசுலாவின் எதிர்காலத்தை அமெரிக்காதான் தீர்மானிக்கும். அங்கு யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும், அந்த நாடு எப்படி இயங்க வேண்டும் என்பதை நாங்களே முடிவு செய்வோம்.
வெனிசுலாவில் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். அது அமெரிக்காவிற்கு உண்மையாக இருக்கும் ஒரு அரசாங்கமாக அமையும்.
அமெரிக்காவிற்கு எதிரான சக்திகள் அல்லது நமது கொள்கைகளுக்குப் பொருந்தாத நபர்கள் புதிய ஆட்சியில் இருக்க மாட்டார்கள். வெனிசுலா இனி ஒருபோதும் அமெரிக்காவின் எதிரியாக இருக்க முடியாது.
எங்களது மேற்பார்வையில் அங்கே ஜனநாயகம் நிலைநாட்டப்படும். ஆனால், அதற்கு முன்னதாக அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வளங்களைச் சீரமைக்க வேண்டியது அவசியம். அதை அமெரிக்க நிபுணர்கள் செய்வார்கள்.
ஒரு நிலையான சூழல் ஏற்படும் வரை அமெரிக்க ராணுவம் அங்கேயே தங்கியிருக்கும். வெனிசுலாவை ஒரு பாதுகாப்பான மற்றும் அமெரிக்காவிற்குச் சாதகமான நாடாக மாற்றுவதே எங்களது இலக்கு" என்று தெரிவித்தார்.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்காவின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள்தான் வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகளை உருவாக்கி, சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டி, தொழிலை நடத்தி வந்தன.
2007ல் அப்போதைய அதிபர் ஹியூகோ சாவேஸ், அமெரிக்க நிறுவனங்களின் வசமிருந்த எண்ணெய் கிணறுகளை அரசுடைமை ஆக்கினார்.
வெனிசுலாவின் எண்ணெய் வெனிசுலாவுக்கே சொந்தம், அமெரிக்காவிற்கு இதில் பங்கு இல்லை என்று கூறி அமெரிக்க நிறுவனங்களை வெளியேற்றினார். இந்நிலையில் அமெரிக்கா மீண்டும் தனது வல்லதிகாலத்தை வெனிசுலாவில் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.























