• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனேடிய குடியுரிமை தொடர்பில் கனடா நிறைவேற்றியுள்ள புதிய சட்டம்

கனடா

வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை மாறியுள்ளது. 

வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை கனடாவில் இருந்தது.

இந்த விதியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ’Lost Canadians’ என்றே அழைக்கப்படுகிறார்கள். 2009இல் அறிமுகமான இந்த விடயம், வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில் அவர்கள் கனேடிய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு தடையாக இருந்தது.

2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஒன்ராறியோ உச்சநீதிமன்றம், இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கனடா அரசும், இந்த சட்டத்தின் விளைவுகள் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க இயலாதவைதான் என ஒப்புக்கொண்டு ஒன்ராறியோ உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.

இந்நிலையில், Bill C-3 என அழைக்கப்படும், 2025ஆம் ஆண்டுக்கான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு, மன்னர் சார்லஸ், சமீபத்தில் ஒப்புதலளித்தார். 

அதைத் தொடர்ந்து, நேற்று, அதாவது, 2025ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, ’குடியுரிமைச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு சட்டம்’ என்னும் அந்த மசோதா, சட்டமாக மாறியுள்ளது.

இந்த சட்டம் நிறைவேறியுள்ளதைத் தொடர்ந்து, வெளிநாட்டில் பிறந்த கனேடிய குடிமக்களுக்கு வெளிநாட்டில் பிறந்த அல்லது அவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது தத்தெடுத்த பிள்ளைகளுக்கும் கனேடிய குடியுரிமை கிடைக்கும் என்பதால், ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது கனேடிய குடியுரிமை பெறத் தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply