• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நூற்றாண்டு விழாவை இன்று கொண்டாடும் இலங்கை வானொலி

இலங்கை

நாட்டின் மின்னணு ஊடகங்களின் முன்னோடியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC), இன்று (16) அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

பிரிட்டிஷ் ஆளுநர் ஹக் கிளிஃபோர்டின் முயற்சியின் கீழ், இலங்கை வானொலி சேவைகள் 1925 டிசம்பர் 16 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன.

இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இது இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது.

முதலில் தொலைத்தொடர்புத் துறையின் ஒரு பகுதியாக இருந்த இந்த வானொலி சேவை, 1949 ஒக்டோபர் 1 அன்று ரேடியோ சிலோன் என மறுசீரமைக்கப்பட்டது – ஜான் ஏ. லாம்ப்சன் அதன் முதல் பணிப்பாளராகப் பணியாற்றினார்.

1967 ஜனவரி 5 ஆம் திகதி, இது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாறியது –  அதன் முதல் தலைவராகவும் பணிப்பாளர் நாயகமாகவும் நெவில் டி. ஜெயவீர நியமிக்கப்பட்டார்.

இன்று, SLBC மூன்று சிங்கள, இரண்டு தமிழ் மற்றும் ஒரு ஆங்கில சேவையை உள்நாட்டில் ஒலிபரப்புகிறது, அதனுடன் ஐந்து வெளிநாட்டு சேவைகளையும் ஒலிபரப்புகிறது.

அதன் பிராந்திய நிலையங்களில் ரஜரட்ட, ருகுண, கந்துரட்ட, வயம்ப ஹந்த, யாழ்ப்பாணம், ஊவா வானொலி மற்றும் பிறை எப்.எம் ஆகியவை அடங்கும்.

அதே சமயம் தம்பன வானொலி சமூக வானொலியாக இயங்குகிறது.

இந்தியாவில் காணப்படாத அரிய ஹிந்தி பாடல் பதிவுகள் மற்றும் உலகத் தலைவர்களின் குரல் பதிவுகளின் தனித்துவமான தொகுப்பு உட்பட, ஆசியாவிலேயே பதிவு செய்யப்பட்ட பாடல்களின் மிகப்பெரிய நூலகத்தை தேசிய வானொலி கொண்டுள்ளது.

ஆசியாவின் முதல் வானொலி சேவையாகத் தொடங்கி, இலங்கையின் தேசிய அடையாளம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் தேசிய வானொலி முக்கிய பங்கு வகித்து வருகிறது.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிகழ்ச்சிகள் மூலம், மொழி, இலக்கியம், நாடகம், ஆன்மீக விழுமியங்கள், சுகாதாரம், விவசாயம், தேசிய வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றையும் இலங்கை வானொலிச் சேவை ஊக்குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply