இலங்கையின் வரைபடத்திலிருந்து காணாமல் போன கிராமம் மீண்டும் கண்டுபிடிப்பு
இலங்கை
இலங்கை வரைபடத்தில் இருந்து காணாமல் போனதாக பேசப்பட்டு வந்த, பதுளை மாவட்டத்தில் ஊவா பரணகம பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மஸ்பன்ன கிராமத்தின் ஒரு பகுதி தற்போது மீண்டும் தென்பட்டுள்ளது.
அண்மையில் பேரிடரினால் மூழ்கிப் போன மஸ்பன்ன கிராமம் சர்வதேச ரீதியில் பேசும் பொருளாக மாறியிருந்தது.
தற்போது அங்கு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், கிராமத்தில் புதைந்த வீடுகள், பேருந்துகள் மற்றும் கிராமத்தின் முக்கிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 26ஆம் திகதி மதியம் மஸ்பன்ன நகரில் பேருந்து நிலையத்திற்கு மேல் ஒரு பெரிய மண் மேடு சரிந்து விழுந்தது.
பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல பேருந்துகள் மீது மண்மேடு சரிந்தது. தெய்வாதீனமாக அந்த நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளிலும், பேருந்து நிலையத்திலும் எவரும் இருக்கவில்லை.
மேலும் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மஸ்பன்ன கிராம மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்திருந்தனர்.
இரவு வேளையில் மண் மேடுகள் படிப்படியாக இடிந்து வீழ்ந்து கொண்டிருந்த நிலையில், அந்தப் பகுதியிலுள்ள நாயொன்று அனர்த்தம் தொடர்பில் எச்சரித்து பலரை காப்பாற்றியது.
சூட்டி என்ற பெயர் கொண்ட நாய், உரிமையாளரை எச்சரித்த நிலையில், அவரினால் பலர் காப்பாற்றப்பட்டிருந்தனர். இது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்தப் பகுதி மக்கள் அவசரமாக வெளியேறி நிலையில் பாரிய மண்மேடு வீழ்ந்து கிராமம் மூழ்கிப் போனது. எனினும் அந்த இடம் தெரியாமல் மறைந்து போயின.
அன்றிலிருந்து, மஸ்பன்ன நகரம் இலங்கையின் வரைபடத்திலிருந்து மறைந்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு அதிகாரிகளின் உதவியுடன், மஸ்பன்ன கிராமம் இப்போது மீளெழுந்து வருகிறது.
தற்போது பேருந்து நிலையத்தில் புதையுண்ட பேருந்துகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வருகின்றன.






















