• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாணவர்களின் மனநலம் , சமூக நல்வாழ்விற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – பிரதமர்

இலங்கை

எதிர்வரும் 16ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும், பேரிடர் நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்குச் சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டக் கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பேரிடர் நிலைமைக்குப் பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவது மற்றும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நுவரெலியா மாவட்டக் கல்வி அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

நுவரெலிய நகரசபை மண்டபத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ,

எதிர்வரும் 16ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்த போதிலும், பேரிடர் நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்குச் சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி ஒருபோதும் மாணவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்றும், இந்த நேரத்தில் அவர்களின் மனநல மற்றும் சமூக நல்வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் பேரிடர் காலத்தில் ஒருவர்மீது ஒருவர் கருணைமிக்க ஆரோக்கியமான பாடசாலைச் சூழலை உருவாக்க முடியும்.

அனர்த்த வலயங்களில் அமைந்துள்ள பாடசாலைகளைத் திறப்பதற்கு முன்னர் தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளைப் பெற வேண்டும் என்றும், பிரவேசப் பாதைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அனர்த்தங்களை எதிர்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியான உடையை அணியும் வாய்ப்பை வழங்க வேண்டும்.

பேரிடர் நிலைமைக்குப் பின்னரும் நாட்டை முன்பை விடச் சிறப்பாக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின், அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை வெற்றி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும், அது தொடர்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணிகள் 51 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாவட்டக் கல்வி அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
 

Leave a Reply