எஸ்.பி.பி - மனோ இணைந்த பாடல் - மறக்க முடியாத மனோ அனுபவம்
சினிமா
ஹே ராஜா... எஸ்.பி.பி - மனோ இணைந்த பாடல்; பாடி முடித்ததும் கட்டி அணைத்த எஸ்.பி.பி; மறக்க முடியாத மனோ அனுபவம்!
எஸ்.பி.பி தன்னை கட்டியணைத்து பாசத்தை வெளிப்படுத்தியது குறித்து பாடகர் மனோ மனம் திறந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் பாடகர் மனோ. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். ’சின்னத்தம்பி’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே’ பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருதும் பெற்றார். பாடகர் மனோ நேதனூரி கிருஷ்ண மூர்த்தியிடம் கர்நாடக இசை பயின்றார். இவர் மேடை நாடகங்கள் மற்றும் 15 தெலுங்கு படங்களில் நடித்ததாக கூறப்படுகிறது.
பாடகர் மனோ கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான ‘சிங்கார வேலன்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து இருந்தார். அதன் பிறகு நடிக்கவில்லை. பாடகர் மனோவின் பின்னணியை அறிந்து கொண்ட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவரை தன் குழுவில் இணைத்து கொண்டார். பாடகர் மனோ, எம்.எஸ்.விஸ்வநாதனிடம் இரண்டரை ஆண்டுகள் பணிப்புரிந்துள்ளார். அதன்பின்னர், 1984-ஆம் ஆண்டு ‘கற்பூர தீபம்’ திரைப்படத்தில் எஸ்.பி.பி மற்றும் பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் அரிய வாய்ப்பு மனோவிற்கு கிடைத்தது.
இதையடுத்து, இளையராஜா இசையில் ‘பூவிழி வாசலிலே’ உட்பட பல படங்களில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘செண்பகமே’ பாடல் தான் மனோவின் சினிமா கேரியருக்கு திருப்பு முனையாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 26,000 பாடல்களை இவர் பாடியுள்ளார். பாடகர் மனோ பாட்டு பாடுவது மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சியின் இசை நிகழ்ச்சியில் நடுவராகவும் உள்ளார்.
இந்நிலையில், பாடகர் மனோ, எஸ்.பி.பி தன்னை கட்டியணைத்து பாசத்தை வெளிப்படுத்தியது குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “ஜல்லிக்கட்டு படத்தில் இடம்பெற்றிருந்த ’ஹே ராஜா ஒன்றானோம் இன்று” பாடலை 10 ஆயிரம் பேர் இருக்கும் கூட்டத்தில் மேடையில் எஸ்.பி.பி-யும் நானும் இணைந்து பாடினோம். அந்த பாடலை பாடி முடித்ததும் எஸ்.பி.பி என்னை கட்டியணைத்தார். இன்றும் அதனை மறக்க முடியாது. எஸ்.பி.பி எவ்வளவு பெரிய பாடகர். ஆனால், ஜூனியரான என்னை கட்டியணைத்து 10 ஆயிரம் பேர் முன்பு பாசத்தை வெளிப்படுத்தினார்” என்றார்.
தேன்மொழி























