• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாராளுமன்றத்தில் எச்-1பி விசா திட்டத்தை நீக்க மசோதா - அமெரிக்க பெண் எம்.பி. தகவல்

அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை அதிகளவில் இந்தியர்கள்தான் பெற்று உள்ளனர்.

இதற்கிடையே எச்-1பி விசாவுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (ரூ.88 லட்சம்) உயர்த்தியது. எச்-1பி விசா திட்டத்தால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாக டிரம்ப் கட்சியினர் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் எச்-1பி விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் போவதாக டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பியான மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார்.

எச்-1பி விசா திட்டத்தை அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துகின்றன. இதன் மூலம் அமெரிக்க ஊழியர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் ஓரம் கட்டப்படுகிறார்கள்.

இதனால் எச்-1 பி திட்டத்தை முழுமையாக நிறுத்தும் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வர போகிறேன். அமெரிக்கர்கள் உலகின் மிகவும் திறமையான மக்கள், மேலும் எனக்கு அமெரிக்க மக்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. நான் எப்போதும் அமெரிக்கர்களை முதன்மைப்படுத்துவேன்.

எனது மசோதா ஊழல் நிறைந்த எச்-1பி திட்டத்தை நீக்கும் என்றார். சமீபத்தில் அதிபர் டிரம்ப், எச்-1பி விசா தொடர்பான தனது கருத்தில் இருந்து பின்வாங்கினார். அமெரிக்காவுக்கு திறமையான வெளிநாட்டு பணியாளர்கள் தேவை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply