கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு
இலங்கை
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிறுமி மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருகோணமலையில் தொழில் புரிந்த குறித்த 27 வயது இளைஞர் நேற்றிரவு வீடு திரும்பியுள்ளார்.
இவரின் காதலி எனக் கூறப்படும் குறித்த 16 வயது சிறுமி தங்கி இருந்த அறைக்கு சென்று கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபரை அடையாளம் கண்டு அவரைக் கைது செய்வதற்காக கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குறித்த இளைஞன் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.























