• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இரவு முழுவதும் ரஷியா ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா தாக்குதலை தொடங்கியது. போர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆன போதும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ரஷியாவும், உக்ரைனும் ஒருவருக்கொருவர் மாறி, மாறி தாக்கி வருகின்றனர்.

ரஷியா நடத்திய தாக்குதலில் உக்ரைனில் உள்ள பல நகரங்கள் கடுமையான சேதமடைந்து உள்ளது. ஏராளமான கட்டிடங்கள் எலும்பு கூடுகள் போல காட்சி அளிக்கிறது. ரஷியாவுக்குள் புகுந்து உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையில் ரஷியா இறங்கி இருக்கிறது.

இந்த நிலையில் சமீப காலமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது. இடைவிடாமல் ஏவுகணைகள், டிரோன் களை வீசியது.

உள்கட்டமைப்பு வசதிகள், குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் கூறி உள்ளது. இரவு முழுவதும் குண்டு மழை பொழிந்தது.

கீவ் சர்வதேச விமான நிலையம் அருகே டெஸ்னி யான்ஸ்கி பகுதியில் உள்ள 5 மாடி கட்டிடமும் ஏவுகணை தாக்குதலுக்கு தப்பவில்லை. அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

மேலும், பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உள்கட்டமைப்புகள் தாக்குலுக்கு ஆளானதால் மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரஷியாவின் இந்த தாக்குதலில் கர்ப்பிணி பெண் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ரஷியா தாக்குலால் கீவ் நகர மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
 

Leave a Reply