தட்டட்டும் கை தழுவட்டும்....காக்கா பொண்ணுக்கு கல்யாணம்
சினிமா
1968-ம் ஆண்டு.
அப்போது அதிராம்பட்டினம் காதிர் மொஹிதீன் கல்லூரியில் படித்து வந்தேன் .
மெல்லிசை கச்சேரி என்பதெல்லாம் அந்த காலகட்டத்தில் மிகவும் அரிதாக நடைபெறும் .
திருச்சி கண்டோன்மென்டில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக மெல்லிசை மன்னர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது .
டி.எம் .சவுந்தரராஜன் ,பி .சுசீலா ,பி .பி .சீனிவாஸ் ,எல் .ஆர் .ஈஸ்வரி ஆகியோர் பாடினார்கள் .கலை நிகழ்ச்சியை பார்க்க பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சி வந்தேன் .
நிகழ்ச்சி திறந்தவெளி மைதானத்தில்,சுற்றிலும் தென்னங்கீற்றினால் மறைப்பு போட்டு , டிக்கெட் நிகழ்ச்சியாக நடந்தது .
நான் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன் .
உள்ளே ஒரே அதிர்ச்சி .எல்லா வகுப்புக்கும் தரைதான் .ஒவ்வொரு வகுப்புக்கும் இடையில் கயிறு கட்டி இருந்தார்கள் .
மெல்லிசை மன்னரின் தீவிர பக்தரான நான் ,மிகுந்த ஆர்வத்துடன் மேடைக்கு முன்னதாக இடம் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தேன் .
மேடையில் இசைக்குழுவினர் வந்து அமர்ந்து தங்கள் வாத்தியங்களை சரிசெய்துகொண்டிருந்தனர் .
ஒரே கரகோஷம் . மேடையில் மெல்லிசை மன்னர் ,டி.எம் .சவுந்தரராஜன் ,பி .சுசீலா ,பி .பி .சீனிவாஸ் ,எல் .ஆர் .ஈஸ்வரி ஆகியோர் வரவும் ,எனது ஆர்வம் அலைமோதியது .
திடீரென பின்னாடி இருந்த கட்டுக்கடங்காத கூட்டம் முன்னேறி
வர ஆரம்பித்தது .
கூட்ட நெரிசலில் சிக்கி ,பொங்கலுக்கு எடுத்த புது சட்டையின் பின்புறம் நேர்கோடாக கிழிய ,மொத்த சட்டையும் கிழியுமுன், அங்கிருந்து தப்பித்து , கூட்டத்தின் கடைசி பகுதிக்கு வந்துவிட்டேன் .
சட்டை கிழிந்தது கூட எனக்கு பெரிதாக படவில்லை .நான் மிகவும் நேசிக்கும் மெல்லிசை மன்னரையும் டி.எம் .சவுந்தரராஜன் ,பி .சுசீலா ,பி .பி .சீனிவாஸ் ,எல் .ஆர் .ஈஸ்வரி ஆகியோரின் நிகழ்ச்சியையும் அருகில் இருந்து பார்க்க முடியாமல் போனதில் மிகுந்த ஏமாற்றம் ,கோபம் .
வெளியில் வந்து மைதானத்தின் பின்புறம் வந்து நின்றேன் .அங்கும் தடுப்புகள் போடப்பட்டிருந்ததால் யாரையும் பார்க்க முடியவில்லை .
நொந்து போய் நின்றுகொண்டிருந்த போது, பி .சுசீலா அம்மையாரின் பாடல் ஒலித்தது .
அந்த ஆண்டு வெளிவந்த 'என் தம்பி' படத்தின் பிரபலமான பாடலான "தட்டட்டும் கை தழுவட்டும்" பாடல் .
1980- ம் ஆண்டு 'பாசி' படத்தின் 'காக்கா பொண்ணுக்கு கல்யாணம் ' பாடல் பதிவில் பி.சுசீலா அம்மையாருக்கு பாடல் சொல்லிக்கொடுக்கும்போது ,திருச்சி கலை நிகழ்ச்சியில் நேர்ந்த ஏமாற்றம் என் மனதில் நிழலாடியது .
Aravind Siddhartha























