பிரான்ஸ் அரசின் செவாலியர் விருதை பெற்றார் கலை இயக்குநர் தோட்டா தரணி
சினிமா
இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டது.
இன்று நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி நாளை நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது.
முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
ஓவியரான தோட்டா தரணி, கலை இயக்குனராக சினிமா காட்சிகளுக்கு தத்ரூபமாக செட் அமைப்பதில் பெயர் பெற்றவர்.
நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி காட்சிகள், காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள, ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்கக் காட்சிகள், சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
ஆனால் சினிமாவை தீவிரமாக பின்தொடர்பவர்களால் கூட அவை சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதை நம்ப கடினமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக உண்மைத் தன்மையுடன் அவரின் செட்கள் அமைந்தன.
கடைசியாக, அவர் 'குபேரா', 'ஹரிஹர வீர மல்லு', 'காட்டி' ஆகிய படங்களுக்குக் கலை வடிவமைப்பை மேற்கொண்டிருந்தார்






















