உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?
சினிமா
உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?''போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்! அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. ....






















