கிரிந்த போதைப்பொருள் கடத்தல் - சந்தேக நபர்களை 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
இலங்கை
கிரிந்த போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க திஸ்ஸமஹாராம நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேக நபர்கள் நேற்று (12) பிற்பகல் திஸ்ஸமஹாராம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, சந்தேக நபர்கள் குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளது.
கிரிந்த கடற்கரையில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, தரைவழியாக கொண்டு செல்லப்பட்ட 345 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் எட்டு சந்தேக நபர்களை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு கைது செய்தது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை, தற்போது டுபாயில் தலைமறைவாக உள்ள டிக்வெல்லவைச் சேர்ந்த ‘ரன் மல்லி’ எனப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினருக்கும், போதைப்பொருள் கடத்தல்காரருக்கும் சொந்தமானது என்பது முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
























