வேற்று கிரகத்தில் சாகச பயணம்.. மிரட்டலான ப்ரிடேடர் பேட் லாண்ட்ஸ்
சினிமா
வளிமண்டலத்தில் ப்ரிடேட்டர் இனத்திற்கென்று தனியான ஒரு கிரகம் இருக்கிறது. இந்தக் கிரகத்தின் பெயர் யாட்ஜா பிரைம். இதில் வசிக்கும் ப்ரிடேட்டர்கள் யாட்ஜா என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மற்ற கிரகங்களில் உள்ள உயிரினங்களை வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
யாட்ஜா என்றால் பலசாலியாகவும், கருணையே அற்ற வேட்டைக்காரனாகவும் இருக்க வேண்டும். ஆனால், கதையின் நாயகனான யாட்ஜா இனத்தைச் சேர்ந்த டெக், மற்ற யாட்ஜா-களை விட பலவீனமாக இருக்கிறான். இதனால் டெக்கை வெறுக்கும் அவனது தந்தை, அவனைக் கொல்ல உத்தரவிடுகிறார். ஆனால், டெக்கின் அண்ணன், தன் தம்பிக்குத் தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி அவனைக் கொல்ல மறுக்கிறான்.
தந்தையே டெக்கைக் கொல்ல முயலும்போது, அண்ணன் தம்பியைப் பாதுகாக்கும் முயற்சியில் தந்தையின் கையால் இறக்கிறான். இறப்பதற்கு முன், தம்பி டெக்கை ஒரு விண்கலத்தில் ஏற்றி கென்னா என்ற கிரகத்திற்கு அனுப்பி வைக்கிறான். கென்னா கிரகத்தில் யாராலும் அழிக்க முடியாத காலிஸ்க் என்ற மிருகம் உள்ளது. அதைக் கொன்று வேட்டையாடினால், தன்னைத் தனது கிரகத்தில் அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் டெக், அந்தக் காலிஸ்க்கைத் தேடிப் பல வினோத உயிரினங்கள் உள்ள அந்தக் கிரகத்தில் தனது பயணத்தைத் தொடர்கிறான்.
வழியில், பூமியிலிருந்து அந்தக் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட தியா என்ற மனித வடிவிலான ரோபோவை டெக் சந்திக்கிறான். தியா ஏற்கனவே காலிஸுடன் சண்டையிட்டு தனது உடலின் ஒரு பாதியை இழந்தவள். எனவே, காலிஸ் இருக்கும் இடத்தைத் தான் காட்டுவதாக டெக்குடன் ஒரு ஒப்பந்தம் செய்து பயணத்தைத் தொடர்கிறாள்.
இதற்கிடையே, காலிஸை வேட்டையாட பூமியிலிருந்து மற்றொரு ரோபோ குழுவும் வந்து சேர்ந்துள்ளது. டெக், தியா காலிஸைக் கண்டுபிடித்தார்களா? இறுதியில் காலிஸ் வேட்டையாடப்பட்டதா? என்பதுதான் மீதிக்கதை.
நடிகர்கள்:
டெக் கதாபாத்திரத்தில் டிமிட்ரியஸ் ஷுஸ்டர்-கோலோமதாங்கி மற்றும் தியா கதாபாத்திரத்தில் எல்லே பன்னிங் சிறப்பாக நடித்துள்ளனர். படம் முழுவதும் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும், டெக் கதாபாத்திரத்திற்கு டிமிட்ரியஸ் ஷுஸ்டர் நியாயம் செய்திருக்கிறார். நகைச்சுவை உணர்வு கொண்ட தியா கதாபாத்திரத்திற்கு எல்லே பன்னிங் வலு சேர்த்துள்ளார். அதிக ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட படத்தில், இருவரின் கெமிஸ்ட்ரி காண்போருக்கு இதமளிக்கிறது.
இயக்கம்:
மனிதனே அல்லாத, அதிக CGI உடன் வேற்றுகிரகவாசிகள், மிருகங்கள், ரோபோக்கள் என நகரும் படத்தில், குடும்ப உறவு, அண்ணன் தம்பி பாசம், நட்பு, விரோதம், பலவீனம், நிராகரிப்பு போன்ற உணர்ச்சிகளை இயக்குநர் டான் ட்ராக்டென்பெர்க் தொட்டுக் காட்டி இருக்கிறார். முந்தைய படங்களில் வில்லனாக இருந்த பிரிடேட்டர் இனத்தவனைக் கதாநாயகனாக வைத்து மாறுபட்ட கோணத்தில் படம் உருவாகி இருப்பது இயக்குனரின் புதிய பாய்ச்சல்.
காட்சிகள் - ஒளிப்பதிவு:
கென்னா கிரகம் மிக பிரம்மாண்டமாக CGI வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டெக் - தியா தங்கள் சாகசப் பயணத்தில் எதிர்கொள்ளும் டிராகன்கள், யானை போன்ற மிருகங்கள், விசித்திரத் தாவரங்கள் சுவாரஸ்யமூட்டுகின்றன. டெக் மற்றும் காலிஸ்க் இடையே நடக்கும் சண்டை மிரட்டலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொருந்தக்கூடிய பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
மொத்தத்தில், ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் சாகசப் படமாக, அதிரடிகளுடன் கூடிய த்ரில்லிங் அனுபவத்தை 'ப்ரிடேட்டர்: பேட்லேன்ட்ஸ்' அளிக்கிறது.
























