யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்
இலங்கை
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு , நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு மாத்திரம் உதவிகளை வழங்காது, உறவினர்கள் ,நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களையும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அறிக்கையிடலுடன் உதவிகளை வழங்க முடியும் என அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்
சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக இணையவழி ஊடாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய உதவிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கலுக்காக – தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் 60 மில்லியன் ரூபா நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பிரதேச செயலர்கள், பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு 03 நாட்களுக்கு சமைத்த உணவை ஒழுங்கமைப்பில் வழங்க முடியும்.
மேலதிக நாட்களுக்கு வழங்க வேண்டியிருப்பின் என்னிடம் அனுமதி பெற்று மேலும் 04 நாட்களுக்கு வழங்க முடியும். அதற்கு மேலும் 07 நாட்களுக்கு அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு வழங்க வேண்டிய தேவை ஏற்படின் அமைச்சின் செயலாளர் அனுமதி பெற்று வழங்கமுடியும் .
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருக்காமல் அவர்களுடைய வீடுகள் அல்லது நண்பர்கள் ,உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் என்ற அறிக்கையிடலுடன் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அல்லது சமைத்த உணவு வழங்கலாம்.
அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பொருட்கள் பிரதேச செயலாளர்கள் மூலமே பதிவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.
ஏற்கனவே பிரதேச செயலகங்களுக்கு அவசர தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்ட தறப்பாள், நுளம்பு வலைகள், மடிக்கும் கட்டில்கள் வழங்கப்பட்டதற்கு மேலதிகமான தேவைப்பாடுகளை வழங்குவதற்கான கோரிக்கைகள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதேச செயலாளர்கள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றுநிருபங்கள், அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் இது தொடர்பான திருத்தப்பட்ட கடிதங்கள் தொடர்பாக கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு உரிய தெளிவூட்டல்களை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித இடையூறும் அற்ற வகையில் சமைத்த உணவு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.






















