• Welcome to TamilsGuide
செய்திகள் 1

DNA கட்டமைப்பை கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட்சன் காலமானார்

சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் என்பவரால் 1869 ஆம் ஆண்டு டிஎன்ஏ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் டிஎன்ஏவின் கட்டமைப்பு 1953 ஆம் ஆண்டு அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் மற்றும் இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் 'டபுள் ஹெலிக்ஸ்' டிஎன்ஏ கட்டமைப்பை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். கடந்த வியாழக்கிழமை நியூயார்க்கின் கிழக்கு நார்த்போர்ட்டில் அவர் உயிர் பிரிந்தது.

அவரது மகன் டங்கன் வாட்சன் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் இதை உறுதிப்படுத்தி உள்ளார். நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையில் நிம்மதியாக இறந்தார் என டங்கன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 6, 1928 அன்று சிகாகோவில் பிறந்த வாட்சன், தனது 24 வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரான்சிஸ் கிரிக்குடன் டிஎன்ஏவின் அமைப்பு குறித்து ஆராய்ச்சி நடத்தினார்.

1953 இல் அவர்கள் முன்மொழிந்த 'இரட்டை ஹெலிக்ஸ்' மாதிரி, உயிரினங்களில் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரம்பரை தகவல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை விளக்கியது, இது அறிவியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாறியது.

இந்தக் கண்டுபிடிப்புக்காக வாட்சன், கிரிக் மற்றும் மற்றொரு விஞ்ஞானி மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு 1962 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மரபியல், தடயவியல் மற்றும் பரம்பரை நோய்கள் பற்றிய ஆய்வுகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பேருதவியாக அமைந்தது. 


 

Leave a Reply