• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை

சினிமா

எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் நாகப்பட்டணத்தில் புயல் வீசி பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டது. நிவாரணப் பணிகளை முழுவீச்சில் செய்து வந்தது தமிழக அரசு. என் பங்காக முதல்வரிடம் 10,000 ரூபாய் கொடுக்க விரும்பினேன்.
அப்போது என் சம்பளம் 25,000 ரூபாய். என் வீட்டுக்கு பின்னாடி தெருவில் தான் எம்.ஜி.ஆர். அலுவலகம் இருந்தது. போன் செய்து புயல் நிவாரண நிதி தரணும்ணே என்று சொன்னதும். “நீ இப்ப எங்க இருக்க” என்று கேட்டார். “வீட்டுல தான்ணே இருக்கேன்” என்றேன்.
“இங்க கூட்டம் அதிகமா இருக்கு. நீ கோட்டைக்கு வந்திடேன்” என்றார்.
எம்.ஜி.ஆரை பார்க்கணும்னு எங்கம்மா ரொம்ப நாளா சொல்லிகிட்டு இருந்தது ஞாபகம் வர, “அம்மா... எம்.ஜி.ஆரை பார்க்க போறேன் வர்றியா”ன்னு கேட்டேன்.
அன்னைக்கு அவங்களுக்கு காய்ச்சல் வேற. எதுவுமே பேசல. கடகடனு உள்ள போச்சு. முகத்தை கழுவி, புடவையை மாத்திகிட்டு, நெத்தி நிறைய விபூதியை பூசிக்கிட்டு, கண்ணாடி போட்டுகிட்டு ரெடியாகி வந்து நின்னுட்டாங்க.
கோட்டைக்கு போய் தகவல் சொல்லிவிட்டு காத்திருந்தோம். முதல் மாடியில் தான் முதல்வர் அறை. சிவகுமார் தன் அம்மாவோடு வந்திருக்கார்னு தகவல் சொல்லி இருக்கிறார்கள். சொன்னா நம்பமாட்டீங்க... அடுத்த அஞ்சாவது நிமிஷம், எம்.ஜி.ஆர். மேலே இருந்து இறங்கி வந்தார். அம்மாவை கையெடுத்து கும்பிட்டு எங்களை அவரே மாடிக்கு அழைத்துச் சென்றார்.
பெரியவர்களை வரவேற்கையில் தங்கள் பின்பகுதியை காட்டக்கூடாது என்று சொல்வார்கள். அதனால் படிக்கட்டுகளில் ஏறும்போது கூட வாங்கம்மா... வாங்க.... என்று அம்மாவை வரவேற்றபடி ரிவர்ஸிலேயே படியேறினார். அவரது அறைக்கு சென்றதும், அம்மா தன் கையால் எம்.ஜி.ஆரிடம் செக்கை கொடுத்தார்.

அம்மாவைப் பார்த்து, “அம்மா... இதமாதிரி ஒரு பிள்ளை உங்களுக்கு கிடைக்க மாட்டான்மா...” என்றார்.
என்னைப் பார்த்து, “டேய்... தம்பி, இதமாதிரி உனக்கொரு அம்மா கிடைக்க மாட்டாங்க. அவங்கள நல்லா பார்த்துக்க” என்றார்.
அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்.
அதன்பிறகு 1979-ல் என்னுடைய 100-வது பட வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். மேடையில் என் அம்மாவையும் அமர வைத்திருந்தேன்.
அந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பேசும்போது, “இந்தக் கோலத்திலே ஒரு தாய் வீட்டில் இருந்தால், அந்தத் தாயாரை அழைத்து வந்து இந்த மேடையிலே அமர்த்துகின்ற துணிவு, தைரியம் இங்கு இருக்கும் எத்தனை பேருக்கு இருக்கிறது.
தான் இந்த உலகத்தில் தோன்றுவதற்கு காரணமான தெய்வம், அன்னையை மிஞ்சிய தெய்வம் இவ்வுலகில் வேறில்லை என்ற எண்ணம் கொண்ட ஒருவரால் தான் இப்படி செய்ய முடியும். சிவகுமாரை நான் போற்றுகிறேன்” என்று பேசினார்.
இப்படி என் அம்மாவை சந்தித்த இரண்டு சந்தர்பங்களிலும் அவர் மீதிருந்த பெரும் மதிப்பை வெளிப்படுத்தினார் !
எம்.ஜி.ஆர் அவர்கள்.

 

- நடிகர் சிவகுமார்!

Leave a Reply