சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ எந்திரம்
அழகாக முடிவெட்டிக் கொள்வது சவாலான வேலையாக மாறிவிட்டது. ஒவ்வொரு முறையும் நண்பர்கள் நம்மை கேலி செய்யாத அளவுக்கு அழகான சிகை அலங்காரம் அமைவதற்கு தனி முடி திருத்துனரை தேர்வு செய்து, காத்திருந்து கத்தரித்துக் கொண்டால்தான் உண்டு.
ஆனால் இனி அந்தக் கவலையில்லாமல் ரோபோ எந்திரம் நீங்கள் விரும்பும் ஸ்டைலில் முடிவெட்ட காத்திருக்கிறது. ஆம்... அப்படியொரு எந்திரத்தில் வாலிபர்கள் சிலர் முடிவெட்டி சிகை அலங்காரம் செய்து கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நிஜம்தான், அது கற்பனை சினிமா காட்சியல்ல. 'ஆட்டோ ஸ்ட்ரீட் பார்பர்' என குறிப்பிடப்படும் அந்த எந்திரம், ராட்சத ஸ்பீக்கர் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. அதில் விரும்பிய ஸ்டைல் குறித்த கட்டளைகளை சொடுக்கி வாஷிங்மெஷின் கதவு போன்ற ஒரு திறப்புக்குள் நமது தலையை நுழைத்தால் போதும், சில வினாடிகளில் சிகை அலங்காரத்தை முடித்து விடுகிறது ரோபோ. அதிகபட்சம் ஒரு நிமிடம் கூட ஆகாது.
இந்த எந்திரங்கள் நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோ சிகை அலங்கார பிரியர்களால் ஆச்சரியத்துடன் பரப்பப்பட்டு வருகிறது.























