மக்கள் திலகம் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார்
சினிமா
மக்கள்திலகம்எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு.
அவரது 'நாடோடிமன்னன்' திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார்.
பின்னாளில், 'நாடோடிமன்னன்' வெற்றிபெற்று திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரித்துப்பார்த்தால் முந்தைய பதிவுத்தபால் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது.
அதில், 'நாடோடிமன்னன்' கதை என்னுடையது. அதை, உங்களுக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பிவைத்தேன். ஆனால், படத்தில் என்பெயர் இல்லை. அதனால் அதற்கு எனக்குரிய நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் என்றிருந்தது. அதிர்ந்துபோனார் எம்.ஜி.ஆர்.
பிறகு, அதற்கு தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிவிட்டாலும், “இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்" என ஆச்சர்யமாகி அதன்பின் சந்தேகம்படும்படியான பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்துக்கொண்டார்.
( படம் : நாடோடி மன்னன் தயாரிப்பின் போது எம்ஜியார் பிக்சர்ஸ் உபயோகித்த கடித உறை )






















