எதிர்காலப் பாரதத்தின் வாழ்க்கை என்றுதான் எழுதினேன்
சினிமா
"இன்று போல் என்றும் வாழ்க" என்ற படத்தில் நான் ஒரு பாடலை எழுதினேன். "இது - நாட்டைக் காக்கும் கை உன் - வீட்டைக் காக்கும் கை இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இது - எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை" இதுதான் அந்தப் பாடல். இது - எதிர்காலப் பாரதத்தின் வாழ்க்கை என்றுதான் எழுதினேன். பாரதத்தின் என்ற வார்த்தையை நீக்கிவிட்டுத் தாயகத்தின் என்று மாற்றியவர் எம்.ஜி.ஆர்.தான்.
"அன்புக்கை இது ஆக்கும் கை - இது அழிக்கும் கையல்ல சின்னக்கை ஏர் தூக்கும்கை - இது திருடும் கையல்ல நேர்மை காக்கும்கை - நல்ல நெஞ்சை வாழ்த்தும்கை - இது ஊழல் நீக்கித் தாழ்வைப் போக்கிப் பேரெடுக்கும்கை" இப்படி எல்லா சரணங்களிலும் 'கை' 'கை' என்றுதான் வரும். நான் எம்.ஜி.ஆர் கையைப் பற்றித்தான் எழுதினேன். ஆனால் இன்று வேறொரு கைக்குப் (காங்கிரஸ்) பிரச்சாரப் பாட்டாக ஆகிவிட்டது. என்றாலும், அன்புக்கு நானடிமை, இது நாட்டைக் காக்கும் கை என்ற இரண்டு பாடலையும்தான் எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.
கல்கத்தாவுக்கு அனுப்பி ஒரே வாரத்தில் இசைத்தட்டாக வெளிவரச் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார். அப்போது அமெரிக்காவிலிருந்து வெளிவந்த 'வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை நான் எழுதிய இந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு என் பெயரையும் குறிப்பிட்டு இதைப் போன்ற கவிஞர்கள் எழுதிய கருத்துள்ள பாடல்களைப் பாடி மக்களைக் கவர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார் என்று எழுதியிருந்தது. டைரக்டர் சங்கர்தான் அந்தப் பத்திரிகையை என்னிடம் காட்டினார். படிப்பதற்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அவர் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு அவர் செய்த நன்மைகள், ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள், மக்களிடம் அவருக்கிருந்த அணுகுமுறை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை இதெல்லாம் சேர்ந்துதான் அவரை ஆட்சிக்குக் கொண்டுவந்ததே தவிர இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அல்ல.
சினிமா என்பது பிரபலத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுமே தவிர அதை வைத்து எல்லாரும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து அவை நூறு நாட்கள் ஓடிவிட்டால் எல்லா நடிகர்களும் முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்தக் கனவு மாயக் கனவு என்பதை நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்ற தேர்தல் பல நடிகர்களுக்கு உணர்த்திவிட்டது. வானத்தில் ஒரு நிலவுதான் இருக்கமுடியும். இன்னொரு நிலவு இருக்காது. அதுபோல் எம்.ஜி.ஆர் ஒருவர்தான் இருக்க முடியும். இன்னொரு எம்.ஜி.ஆர் இருக்க முடியாது.
ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார். அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும் பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர். எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!
- கவிஞர் முத்துலிங்கம்.























