நானுஓயா உடரெதல்ல பகுதியில் சரிந்து விழுந்த கற்பாறைகள்! 47 பேர் பாதிப்பு
இலங்கை
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நானுஓயா உடரெதல்ல மேற்பிரிவு தோட்டத்திலுள்ள, குடியிருப்புகள் மீது கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குடியிருப்புகளின் பின்னால் இருந்த கற்பாறைகள், மண்மேடோடு சரிந்துள்ளமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும், குடியிருப்பில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்தும் மழையுடன் காலநிலை நீடிக்கும் பட்சத்தில், குறித்த பகுதியில் மண்மேட்டுடன் கற்பாறைகள் சரிந்து விழுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் சிறு பிள்ளைகளை வைத்துக் கொண்டு உயிர் அச்சத்துடன் வாழ்வதாகவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.






















