அண்மையில் காலம்சென்ற குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் பற்றிய எனது நினைவுகள்
சினிமா
குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களை முற்றாக அறிந்துகொள்ளும் விதமாக நான் அவருடன் நெருங்கிப் பழகியவனல்ல என்றாலும் அவர் எமது காலத்தில், எம் மத்தியில் வாழ்ந்து, தமிழ் மேடை நாடகத்துறையில் பல முன்னேற்றகரமான முயற்சிகளை மேற்கொண்டு கணிசமான வெற்றிகளைப் பெற்றவரென்று அறிந்திருக்கிறேன்.
1977ஆம் ஆண்டு வெளிவந்த காவலூர் இராஜதுரை அவர்களின் ‘பொன்மணி’ திரைப்படத்தில்த்தான் நான் அவரை முதல்முதலில் பார்த்தேன்.
அக்காலப் பகுதியிலேயே அவர் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரியை அமைத்து மாணவர்களுக்கு நாடகக் கலையைப் பயிற்றுவிக்கும் கலைத்தொண்டை ஆரம்பித்தபோது நாடகத்துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் அவரது பெயர் அதிகம் பேசப்படலாயிற்று. எனக்கு தெரிந்த சிலர் அப்போது அந்த நாடகப் பள்ளியில் இணைந்து இயங்கினார்கள். குறிப்பாக, எனது கல்லூரிக் காலத்தில் எமது கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியதோடு எமக்கெல்லாம் நாடகம் பயிற்றுவித்து மேடையேற்றிய ஏ. ரீ. பொன்னுத்துரை அவர்களும் அப்பள்ளியில் ஒரு மாணவனாக இணைந்துகொண்டாரென்று கேள்விப்பட்டதும் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் ஒரு நாடகப் பேராசானாகத்தான் இருக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.
அவர் தொடர்ந்து நாடகத்துறையில் இயங்கி, பல மேடை நாடகங்களை எழுதியதும் தயாரித்ததும் பல மாணவர்களை அத்துறையில் உருவாக்கியதும் சகலரும் அறிந்ததே.
அவரை நான் முதல்முதலாக நேரில்ப் பார்த்தது 1986ஆம் ஆண்டின் பிற்பகுதியில் காலமாகிய பிரபல மேடை, வானொலி நாடகத் தயாரிப்பாளரும் இயக்குநருமாகிய கே. எம். வாசகர் அவர்களின் அஞ்சலிக் கூட்டத்தில். காலம்சென்ற நடிகமணி வீ. வீ. வைரமுத்து அவர்களால் ஏழாலையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த அந்த அஞ்சலிக் கூட்டத்தில் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் ஒரு பேச்சாளராகக் கலந்துகொண்டார். ஆனால், அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் அன்று எனக்குக் கிடைக்கவில்லை.
பின்னர் சிங்கள வீதி நாடகச் செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடுகாட்டி அதன்பின்னர் தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளராகப் பிரபலம் பெற்றிருந்த பராக்கிரம நீரியல்லவும் நானும் 1987ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முறையே சிங்கள, தமிழ் தொலைக்காட்சி நாடகங்களை வடபகுதியில் தயாரிக்கும் ஆயத்தங்களைச் செய்வதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களை கட்டாயமாகச் சந்திக்கவேண்டுமென்று பராக்கிரம நீரியல்ல விரும்பியதன்பேரில் நாமிருவரும் திருநெல்விலியிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தோம். அன்றுதான் முதல்முதலில் அவருடன் மிகநீண்ட நேரம் உரையாட முடிந்தது. அந்த உரையாடலில் நான் கவனித்த மிக முக்கியமான விடயம் அவரது தன்னடக்கம். நாடகக் கலையில் மிக ஆழமான அறிவைக்கொண்டிருந்த அவருடன் பேசுவது மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.
1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நான் புலம்பெயர்ந்த பின்னரும் பராக்கிரம நீரியல்ல சண்முகலிங்கம் அவர்களுடனான தொடர்பை தொடர்ந்து பேணி, பல தமிழ், சிங்கள கூட்டு நாடக முயற்சிகளை இருவரும் இணைந்து மேற்கொண்டார்கள்.
2009ஆம் ஆண்டு, நாட்டின் போர்ச்சூழல் உக்கிரமடைந்திருந்த நிலையிலும் சண்முகலிங்கம் அவர்களது பிரசித்திபெற்ற ‘எந்தையும் தாயும்’ நாடகத்தை சிங்களத்தில் ‘ஹிரு நகினதுறு’ (சூரியன் உதயமாகும்வரை) என்ற பெயரில் மொழிபெயர்த்து மேடையேற்றி சிங்கள நாடக இரசிகர்களிடையேயும் அந்த நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிப்பதற்கு நினைத்திருந்ததாகவும் அந்த எண்ணம் இதுவரை கைகூடவில்லையென்றும் பராக்கிரம தெரிவித்திருந்தார்.
குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களது திறமையால் கவரப்பெற்ற பராக்கிரம, பிரசித்திபெற்ற ஜேர்மனிய நாடக ஆசிரியரான பேர்ட்டோல் ப்றச்ட் அவர்களின் மிகப்பிரபலமான ‘த கொக்கேஷியன் ச்சோக் சேர்க்கிள’என்ற நாடகத்தை சண்முகலிங்கம் அவர்களைக்கொண்டு தமிழில் மொழிபெயர்ப்பித்து அவரது உதவியுடன் ‘வெண்கட்டி வட்டம்’ என்ற பெயரில்; மேடையேற்றினார். அது தமிழ், சிங்கள நடிகர்கள் இணைந்து நடித் ஒரு கூட்டுத்தயாரிப்பாகத் தயாரிக்கப்பட்டதென்றும் அந்த நாடகமும் பார்வையாளர்களிடத்து மிகுந்த வரவேற்பைப்பெற்றதென்றும் பராக்கிரம நீரியல்ல தெரிவித்தார்.
இவ்வாறு தமிழ், சிங்கள நாடகத்துறைகளை இணைத்து ஒரு தனித்துவமான நாடத்துறையை விருத்திசெய்வதிலும் தனது பங்களிப்பை வழங்கியவர் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள். அவரது மறைவு தமிழ் சமூகத்திற்குப் பேரிழப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
அவரது ‘எந்தையும் தாயும்’ நாடகத்தை நான் 1992ஆம் ஆண்டில் ரொரன்ரோவில் இயங்கும் ‘தேடகம்’ அமைப்புக்காக நெறிப்படுத்தினேன். அந்த நாடகத்தில் பங்குபற்றிய நடிகர்களும் அந்த நாடகம் இடம்பெற்ற நாடகவிழாவில் பங்குபற்றிய சில இளைஞர்களும் நாடகத்துறையில் ஆர்வம்கொண்டவர்களாக இணைந்து உருவாக்கிய ‘மனவெளி’ என்ற அமைப்பு, ரொரன்ரோவில் தமிழ் நாடகத்துறையில் வளர்ச்சிக்குப் பெரும்பங்களிப்புச் செய்வது ரொரன்ரோ தமிழ் நாடகத்துறையின் வரலாறு. அந்த வரலாற்றின் உந்துசக்தியாக எந்தையும் தாயும் நாடகமும் பங்களிப்புச் செய்திருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் சர்வதேச ரீதியில் நவீன நாடகத்தின் தந்தை என்று போற்றப்படுகின்ற ஹென்றிக் இப்ஸன் அவர்களின் பிரசித்திபெற்ற ‘ஏ டோல்ஸ் ஹவுஸ்’ என்ற நாடகத்தை ‘ஒரு பாவையின் வீடு’ என்று தமிழில் மொழிபெயர்க்க, அது நூருவில் வெளிவந்து, இப்போது இலங்கையில் நாடகவியல் கற்கும் தமிழ் மாணவர்களுக்கான பாடப்புத்தகமாக இருக்கிறது.
அதே நாடகத்தை நானும்; தமிழில் மொழிபெயர்த்து, ரொன்ரோவில் ‘ஒரு பொம்மையின் வீடு’ என்ற பெயரில் மனவெளிக்காக இயக்கி, மேடையேற்றியபோது அந்த நாடகம் மிகுந்த பாராட்டைப் பெற்றது. அதன் வீடியோ வடிவம் அவ்வை விக்னேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டபோது, சண்முகலிங்கம் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்து அந்த நாடகத்தைப் பாராட்டியதை அறிந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்து, தான் சார்ந்த துறையில் ஈழமக்களுக்குப் பெரும்தொண்டாற்றி மறைந்துவிட்டார்.
அவரது ஆத்ம சாந்திக்காக அவரால் பயனடைந்த பலநூறு நாடகக் கலைஞர்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்தனை செய்கிறேன்.
படம் - 1
குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் பொன்மணி திரைப்படத்தில்.






















