போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது
இலங்கை
ஹஷிஸ் மற்றும் குஷ் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (21) இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சந்தேக நபரிடம் 1 கிலோ 370 கிராம் ஹஷிஸ் மற்றும் 908 கிராம் குஷ் போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிரிபொல பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் 2 கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் (Crystal Methamphetamine) சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொனஹேனவில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) முகாமில் கடமையாற்றும் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹங்வெல்ல நிரிபொல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருள் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் 100,000 ரூபா ரொக்கப் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரமுகர் ஒருவர் சந்தேக நபருக்கு விநியோகம் செய்வதற்காக இந்த ‘ஐஸ்’ கையிருப்பை வழங்கியுள்ளதாக இதுவரை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.