அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சைஃப் அலி கான் பாதுகாவலர்கள் - போலீஸ் விசாரணையில் அம்பலம்
சினிமா
பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சைஃப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்தி தப்பிச் சென்றார். ஆறு முறை கத்தியால் குத்தப்பட்ட சைஃப் அலி கான் பலத்த காயங்களுடன் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சைஃப் அலிகானின் கைகளிலும், கழுத்துப் பகுதியிலும் காயம் ஏற்பட்டிருந்தது. மேலும், முதுகுத் தண்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சைஃப் அலி கான் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார். அவரை கடந்த 4 நாட்களாக மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் நேற்று பிற்பகல் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது வீட்டுக்கு வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த சம்பவத்தில் தானேவில் பதுங்கியிருந்த முகமது என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்றும் அவர் வங்கதேசத்தைச் சேர்த்தவர் என்றும் போலீசார் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், கைதான முகமதுவை போலீசார் சைஃப் அலி கானின் அடுக்கு மாடி குடியிருப்புக்கு அழைத்து சென்று சம்பவத்தன்று என்ன நிகழ்ந்தது என்பதை நடிக்கச் சொன்னனர்.
அதன்படி, சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த முகமது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததை கண்டதும், சத்தம் வராமல் இருக்க காலில் இருந்த காலணிகளைக் கழற்றியும், செல்போனை சுவிட்ச் ஆப் செய்தும் கொண்டான். அதன்பின் அங்கு படிக்கட்டு அருகில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளான். இதையடுத்தே சைஃப் அலிகானை தாக்கியதாக கூறினான்.
இதன்பின், கைதான நபர் எப்படி தப்பி சென்றிருப்பார் என்பது தொடர்பாக அவர் சென்ற இடங்களுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர்.