அதிபர் புதின் ரஷியாவை அழிக்கிறார்.. பெரிய சிக்கல் உருவாகும் - டிரம்ப் பாய்ச்சல்
சினிமா
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை (இந்திய நேரப்படி நேற்றிரவு) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பதிவேற்றபின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 42 முக்கிய ஆவணங்களிலும், பல நிர்வாக ரீதியான உத்தரவுகள் என 100க்கும் மேற்பட்டவற்றில் கையொப்பம் இட்டுள்ளார். அமெரிக்கவில் ஆண், பெண் இருபாலாருக்கு மட்டுமே அனுமதி, உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளும் அதில் அடங்கும்.
இந்நிலையில் பதவியேற்றபின் உக்ரைன் போர் குறித்தும் ரஷியாவை கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார்.
2022 பிப்ரவரி தொடங்கி உக்ரானில் ஏறக்குறைய சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் இணங்க வேண்டும் என்றும், இல்லையெனில் ரஷியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதின் ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும், ஒப்பந்ததிற்கு இணங்காமல் அவர் ரஷியாவை அழிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். பணவீக்கம் உள்ளிட்டவற்றால் ரஷியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும் புடினைச் சந்திக்கவும் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது முந்தைய ஆட்சிக் காலத்தை [2016-20] நினைவு கூர்ந்த டிரம்ப், புதினுடன் உச்சிமாநாட்டில் பங்கேற்றதுபற்றி குறிப்பிட்டார். "நான் அவருடன் நன்றாகப் பழகினேன். அவர் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன்" என்று டிரம்ப் கூறினார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி ஒப்பந்தம் தேவை என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைந்தால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.