மீண்டும் ரிலீசாகும் படையப்பா- ரசிகர்கள் உற்சாகம்
இலங்கை
1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் 'படையப்பா'. இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் , நாசர், மணிவண்ணன், அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. வசூலில் சாதனை படைத்த இப்படம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றம் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வென்று உள்ளது. இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக 'படையப்பா' உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 'படையப்பா' படம் ரீ-ரிலிஸ் செய்யப்படும் என அப்படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் சினிமாத்துறைக்கு வந்து இந்தாண்டுடன் 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு கே.எஸ். ரவிக்குமார் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
1975 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' என்றபடத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினிகாந்த். அதன்பின் கதாநாயகன், வில்லன் என இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார்.