பிறரது தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளியுங்கள்.. ஏ.ஆர். ரகுமான் துணைப் பாடகி மோகினி டே வேண்டுகோள்
சினிமா
இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு கடந்த செவ்வாய்கிழமை இரவு அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்தார். இதன் மூலம் 29 வருட திருமண வாழ்க்கை முறிந்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்து அறிவிப்பு வெளியான அன்றே அவரிடம் பல வருடங்களாக துணை பாடகியாக பணியாற்றும் மோகினி டேவும், தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இதனால் ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு மோகினி டே தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் எழுந்தது.
இதனிடையே தனக்கு எதிரான தவறான செய்திகளை உடனடியாக நீக்குமாறு யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இதனைத்தொர்ந்து உலகிலேயே சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரகுமான் என்றும், அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள துணைப் பாடகி மோகினி டே - வும் இந்த சர்ச்சை குறித்து விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், 'எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். எனது வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையைப் போன்றவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது மகளுக்கு எனது வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
என் மீதும் ஏ.ஆர்.ரகுமான் அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். அவரது இசைக்குழுவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். என்னையும் அவரையும் இணைத்து வதந்திகள் வந்துள்ளன. அவை உண்மை கிடையாது. இந்த வதந்திகள் காயப்படுத்துகின்றன. எனவே கனிவாக நடந்து கொள்ளுங்கள்" என்று மோகினி டே தெரிவித்துள்ளார்